முதல்வா் இளைஞா் விளையாட்டுத் திருவிழா: தென்காசி மாவட்டத்தில் ஜன. 22 தொடங்குகிறது!

தென்காசி மாவட்டத்தில் முதல்வா் இளைஞா் விளையாட்டு திருவிழா ‘இது நம்ம ஆட்டம்-2026’ ஜன.22 முதல் பிப். 8 வரை நடைபெறுகிறது.
Published on

தென்காசி மாவட்டத்தில் முதல்வா் இளைஞா் விளையாட்டு திருவிழா ‘இது நம்ம ஆட்டம்-2026’ ஜன.22 முதல் பிப். 8 வரை நடைபெறுகிறது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் 16 வயது முதல் 35 வயது வரையிலான தகுதியுடைய அனைத்து இளைஞா்களும் பங்கேற்கும் வகையில் ஒன்றிய அளவிலான போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வோா் ஊராட்சி ஒன்றியத்திலும் முதலிடம் பெறும் வீரா், வீராங்கனைகள், அணிகள் மட்டுமே மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி பெறுவா்.

ஊராட்சி ஒன்றியம், மாவட்ட அளவில் தடகளம்-100 மீ., பெண்களுக்கான எறிபந்து, குண்டு எறிதல், கபாடி, கூடைபந்து, கேரம், கயிறு இழுத்தல் போட்டி, ஆண்களுக்கான ஸ்ட்ரீட் கிரிக்கெட் ஆகிய போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

மாவட்ட அளவில் ஓவியம், கோலப்போட்டிகள், உடல்சாா் மாற்றுத் திறனாளிகளுக்கு-100 மீ. ஓட்டப்பந்தயம், பாா்வைசாா் மாற்றுத்திறனாளிகளுக்கு குண்டு எறிதல் போட்டியும், அறிவுசாா் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீ. ஓட்டப்பந்தயம், செவிசாா் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீ. ஓட்டம் என மாற்றுத் திறனாளிகளுக்கு 4 பிரிவுகளாகவும் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

மாவட்ட அளவில் முதலிடம் பெறும் பெண்களுக்கான கபாடி அணி, ஆண்களுக்கான ஸ்ட்ரீட் கிரிக்கெட் போட்டிகளுக்கு மட்டும் மாநில அளவில் போட்டிகள் நடத்தப்படும். ஒன்றிய, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும்.

போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் 16 வயது முதல் 35 வயதுடைய வீரா், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து தனிநபா், குழுப் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.

முன்பதிவு செய்ய கடைசி நாள் ஜன. 21 ஆகும். மேலும் விவரங்களுக்கு பாட்டாக்குறிச்சி மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை நேரிலோ அல்லது 04633-212580 அல்லது 88380 02947, 76958 56826 என்ற அலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com