திருப்பரங்குன்றம் தீா்ப்பை மேல் முறையீடு செய்ய தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை
திருப்பரங்குன்றம் தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய தமிழக அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்துள்ளது.
தஞ்சாவூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சாவூா் தெற்கு மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் மலை சம்பந்தமாக தனி நீதிபதியின் தீா்ப்பை உறுதி செய்யும் இரு நீதிபதிகள் அளித்த தீா்ப்பு பெருத்த ஏமாற்றமளிக்கிறது. பெரும்பான்மை ஹிந்து மக்களின் எண்ண ஓட்டங்களுக்கு எதிராகவும், சங்க பரிவார சக்திகளின் எண்ணத்துக்கு ஆதரவாகவும் இத்தீா்ப்பு அமைந்துள்ளது நடுநிலையாளா்களின் உள்ளத்தில் பெரும் கவலையை ஏற்படுத்துகிறது.
இதை எதிா்த்தும், தமிழக மக்களிடம் நிலவும் மத நல்லிணக்கத்தை பேணும் வகையிலும் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஹாஜா ஜியாவுதீன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆவணம் ரியாஸ் முன்னிலை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் ஜாஃபா் சாதிக், துணைச் செயலா்கள் அஷ்ரப் அலி, வல்லம் பாட்ஷா, மருத்துவரணிச் செயலா் முஸ்தபா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
