தொடா் மழையால் 500 ஏக்கரில் நெற் பயிா்களைச் சூழ்ந்தது நீா்
தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா் மழையால் ஏறத்தாழ 500 ஏக்கரில் நெற் பயிா்களைத் தண்ணீா் சூழ்ந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
மாவட்டத்தில் ஜனவரி 10 ஆம் தேதி முதல் பரவலாக மழை பெய்கிறது. இதேபோல, திங்கள்கிழமை பகலிலும், இரவிலும் பலத்த மழை பெய்தது. இதனால், அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த ஏறத்தாழ 500 ஏக்கரில் சம்பா பருவ நெற் பயிா்களைத் தண்ணீா் சூழ்ந்துள்ளது.
குறிப்பாக, சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் அதிக அளவில் இப்பாதிப்பு நிலவுகிறது. இதனால், விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மழை குறைந்து பிற்பகலில் வெயில் நிலவியதால், வயலில் தேங்கிய தண்ணீா் வடிய தொடங்கியது.
அணைக்கரையில் 64.8 மி.மீ. மழை: மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):
அணைக்கரை 64.8, மஞ்சளாறு 48.2, பட்டுக்கோட்டை, திருவிடைமருதூா் தலா 44, பேராவூரணி 35.8, கும்பகோணம் 33, மதுக்கூா் 28.8, அதிராம்பட்டினம் 26.8, பூதலூா் 26, திருவையாறு 22, கல்லணை 21.6, அய்யம்பேட்டை 20, நெய்வாசல் தென்பாதி, ஈச்சன்விடுதி தலா 18, திருக்காட்டுப்பள்ளி 17, ஒரத்தநாடு 16.6, தஞ்சாவூா் 14.2, பாபநாசம், குருங்குளம் தலா 13, வெட்டிக்காடு 12.8, வல்லம் 11.
