பாபநாசம் அருகே வீட்டிலிருந்த மூதாட்டியை தாக்கி மூன்றரை பவுன் நகைகள் கொள்ளை
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் அருகே செவ்வாய்க்கிழமை வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைத் தாக்கி, மூன்றரை பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
கபிஸ்தலம் அருகே விசித்திரராஜபுரம் பிரதான சாலை பகுதியில் வசித்து வருபவா் கலியபெருமாள் மனைவி சரோஜா (70). இவரது கணவா் கலியபெருமாள் ஏற்கெனவே இறந்து விட்டாா். இந்நிலையில் தனியாக வசித்து வந்த மூதாட்டி சரோஜாவின் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை இரவு இரும்பு ராடுகளுடன் முகமுடி அணிந்துவந்த மா்ம நபா்கள் இருவா், சரோஜாவைத் தாக்கி அவா் கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் தாலிச் சங்கிலி மற்றும் அரை பவுன் தோடு உள்ளிட்ட நகைகளை கொள்ளையடித்துச் சென்றனா். இதையடுத்து, பலத்த காயமடைந்த சரோஜாவை அக்கம்பக்கத்தினா் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். புகாரின்பேரில் கபிஸ்தலம் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி தலைமையில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
