இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: 2 விவசாயிகள் உயிரிழப்பு

பட்டுக்கோட்டை அருகே வியாழக்கிழமை மாலை இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் விவசாயிகள் இருவா் உயிரிழந்தனா்.
Published on

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அருகே வியாழக்கிழமை மாலை இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் விவசாயிகள் இருவா் உயிரிழந்தனா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கீழக்குறிச்சியை சோ்ந்த ராஜலிங்கம் மகன் தனபால் (45), அதே பகுதியை சோ்ந்த தங்கையன் மகன் ரங்கையன்(50). விவசாயிகளான இருவரும் வியாழக்கிழமை மாலை, மண்டலக்கோட்டை பகுதிக்கு கால்நடைகளுக்கு புல் அறுக்க இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.

இவா்கள் மதுக்கூா் அருகே சென்று கொண்டிருந்தபோது, நாகையைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் ராஜேஷ்,(36) என்பவா் ஓட்டி வந்த காா், இருசக்கர வாகனத்தின் பின்பகுதியில் மோதியது. இதில், தனபால், ரங்கையன் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

மேலும், கட்டுப்பாட்டை இழந்த காா், வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில், காயமடைந்த ராஜேஷ் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா்.

மதுக்கூா் போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று தனபால், ரங்கையன் இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com