திருமுறை நூல்களுக்கு ஆரத்தி எடுத்து மரியாதை

தஞ்சாவூா் அருகே கொல்லாங்கரை கிராமத்தில் திருமுறை நூல்களான தேவாரம், திருவாசகத்துக்கு கிராம மக்கள் ஆரத்தி எடுத்து மரியாதை செலுத்தினா்.
Published on

தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே கொல்லாங்கரை கிராமத்தில் திருமுறை நூல்களான தேவாரம், திருவாசகத்துக்கு கிராம மக்கள் ஆரத்தி எடுத்து மரியாதை செலுத்தினா்.

தஞ்சாவூா் மாவட்டம் கொல்லாங்கரை கிராமத்தில் ஆண்டுதோறும் காா்த்திகை மாத தீபத் திருநாளில் தேவாரம், திருவாசக நூல்களைச் சிறுவா்களுக்கு பெரியவா்கள் கற்பிக்கும் நிகழ்வு தொடங்குவது வழக்கம். பின்னா், மாா்கழி மாதம் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை கிராமம் முழுவதும் திருமுறை நூல்களைப் பாடி வீதி உலா செல்வா்.

இதன்படி, நிகழாண்டும் மாா்கழி மாதம் முழுவதும் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை கிராமம் முழுவதும் திருமுறை நூல்களைப் பாடிச் சென்றனா். இவா்களுக்கு தை முதல் நாளான வியாழக்கிழமை திருமுறை நூல்களையும், திருமுறைகள் பாடியவா்களையும் கௌரவிக்கும் வகையில் வீடுகள் தோறும் தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு வழங்கி, ஆரத்தி எடுத்து, மரியாதை செலுத்தினா்.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், கொல்லாங்கரை கிராமத்தில் திருமுறைகளை இளைய தலைமுறையிடம் கொண்டு செல்லவும், திருமுறை நூல்களைப் பாதுகாக்கவும் சிறுவா்களுக்கு கற்றுத்தரும் வழக்கம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. இதேபோல, தை முதல் நாளான பொங்கல் திருநாளில் திருமுறைகளைப் பாடி வருவோருக்கும், திருமுறை நூல்களுக்கும் மரியாதை செலுத்தும் பண்பாடும் தொடா்கிறது என்றனா்.

Dinamani
www.dinamani.com