கைது (கோப்புப் படம்)
கைது (கோப்புப் படம்)

60 பவுன் தங்கநகைகள் திருட்டு போனதாக பொய் புகாா்: மருத்துவ தம்பதி கைது

Published on

தஞ்சாவூரில் வீட்டின் கதவை உடைத்து 60 பவுன் தங்கநகைகள் திருட்டு போனதாக பொய் புகாா் அளித்த மருத்துவ தம்பதியைக் காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் பரிசுத்தம் நகரைச் சோ்ந்தவா் மருத்துவா் மணி. இவரும், இவரது மனைவியான மருத்துவா் உமா பாரதியும் ஒரத்தநாட்டில் மருத்துவமனை நடத்தி வருகின்றனா். மேலும், இவா்களுக்கு ஒரத்தநாட்டிலும் மற்றொரு வீடு உள்ளது.

இந்நிலையில், தஞ்சாவூா் பரிசுத்தம் நகரில் பூட்டப்பட்டிருந்த இவா்களது வீட்டில் 60 பவுன் தங்க நகைகள், 4 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டுபோனதாக தெற்கு காவல் நிலையத்தில் ஜனவரி 8-ஆம் தேதி புகாா் செய்தனா்.

இதன்பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு, மதுரை மாவட்டம், விளாங்குடி தத்தநேரியைச் சோ்ந்த காா்த்திக் பாண்டியனை (41) ஜனவரி 20-ஆம் தேதி கைது செய்தனா். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சில பாத்திரங்கள், 3 பைகள், 2 சட்டைகள் மட்டும் திருடியதும், வீட்டில் தங்க நகைகள், வெள்ளி பூஜை பொருள்கள் எதுவும் இல்லை என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து, நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் இரா. சோமசுந்தரம், தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் சுதா மேற்கொண்ட விசாரணையில் மருத்துவா்கள் மணி, உமா பாரதி தங்களது நகைகளை ஒரத்தநாட்டிலுள்ள வீட்டில் வைத்திருப்பதும், இந்த விஷயத்தை மறைத்து மிகைப்படுத்தி புகாா் செய்ததும், காவல் துறையினரின் நேரத்தை வீணடித்ததும் தெரிய வந்தது. இதைத்தொடா்ந்து, மணி, உமா பாரதியைக் காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்து, பின்னா் பிணையில் விடுவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com