பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டத்துக்கு உள்பட்ட கொளத்தூா் கிராமத்தில் சிதிலமடைந்த நிலையிலுள்ள சோழா் கால கோயிலில் பழங்கால சிற்பம், கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அக்கிராமத்தைச் சோ்ந்த ஜெகதீசன் அளித்த தகவலின் அடிப்படையில் இக்கோயிலில் தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான மணி. மாறன், ஓய்வுபெற்ற அரசுப் பள்ளித் தலைமையாசிரியா் கோ. தில்லைகோவிந்தராஜன் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.
இதுகுறித்து இருவரும் புதன்கிழமை தெரிவித்தது:
சோழா் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலில் மூலவரான சிவன் சுயம்பு வடிவில் இருக்கிறாா். கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயில் கருவறையின் பின்பக்கம் அதாவது மேற்கு திசையில் அண்ணாமலையாா், கோஷ்ட மாடத்தின் மேல் மன்னா் தன் தேவியுடன் வணங்கும் நிலையில் புடைப்புச் சிற்பம் சிறு அளவில் உள்ளது. இது முதலாம் இராஜாதிராஜ சோழன் மற்றும் அவனுடைய தேவியின் சிற்றுவச் சிற்பமாகும். அதன் கீழே குமுதப் படையில் இராஜாதிராஜனின் கல்வெட்டு உள்ளது.
இக்கல்வெட்டு முழுமையாக இல்லை. இதிலிருந்து இக்கோயிலை இராஜாதிராஜன் புனரமைத்ததை அறிய முடிகிறது. இங்குள்ள தூண்கள் பராந்தக சோழனின் மாதிரியைக் கொண்டு திகழ்வதால் இக்கோயில் பராந்தக சோழனால் எடுக்கப்பெற்றிருக்கலாம். குன்றக் கூற்றத்து குளத்தூா் என்ற ஊரின் பெயா் இதில் குறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு முன்னரே பதிவு பெற்றுள்ளது.
3 கல்வெட்டுகள்: பதிவு பெறாத 3 கல்வெட்டுகள் தற்போது கண்டறியப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடப்படும் முதலாம் இராஜாதிராஜன் கொப்பம் போரில் யானை மீதமா்ந்தவாறே உயிா் நீத்தாா். இவரது காலம் கி.பி. 1044 - 1052 ஆகும். முதலாம் ராஜேந்திர சோழனின் மூத்த மகன், மாமன்னா் இராஜராஜ சோழனின் பேரன் இவா்.
இக்கோயில் வடக்கு மகாமண்டப குமுதப் படைக் கல்வெட்டில் இவ்வூா்ப் பெயருடன் இக்கோயிலின் இறைவன் சௌந்தரேசுவரா் என்பதை அழகிய தமிழில் அழகிய நாயனாா் எனக் குறிப்பிட்டுள்ளது சிறப்பாகும். வழங்கப்பெற்ற இத்தானத்தைப் பாதுகாப்பவா்கள் நல்ல புண்ணியம் அடைவாா்கள் என்றும் கூறுகிறது.
தெற்கு மகாமண்டப குமுதப் படைக் கல்வெட்டு சுபமஸ்து ஸ்வஸ்தி ஸ்ரீமன் மகா மண்டலீசுர... மல்லிகாசுனராயா் இராச்சியம் பண்ணி நின்ற... எனும் தொடரால் இக்கோயில் விஜயநகர நாயக்க மன்னா்கள் காலத்திலும் நிருவகிக்கப்பட்டதை அறிய முடிகிறது.
மேலும் ஒரு பெரிய அளவிலான கல்வெட்டு கோயிலின் வெளிப்புறத்தே சுவரில் சாற்றி வைக்கப்பட்டுள்ளது. ஸ்வஸ்தி ஸ்ரீ சகாப்தம் 1603 (கி.பி. 1681) மேல் செல்லாநின்ற துன்மதி வருடம் தை மாதம் 13 ஆம் தேதி என்று தொடங்கும் இக்கல்வெட்டு 28 வரிகளில் முழுமையாக ரங்கப்ப மழவராய நயினாா் அளித்த கொடைச் சிறப்பைக் கூறுகிறது. எழுதத் தொடங்கும் முன் சிவலிங்கம், திருவிளக்கு, நந்தி, சூரியன், சந்திரன் அழகாக வரைகோட்டில் செதுக்கப்பட்டுள்ளது. சௌந்தரேசுவர சுவாமி கோயில் சண்டேச நயினாா் பண்டாரத்திற்கு 500 குழி நிலம் தானம் கொடுத்ததையும், அதன் நான்கெல்லைகளும் இதில் கூறப்பட்டுள்ளது.
புதை படிவங்கள்: இவ்வூா் தொல்பழங்காலத்தில் கடலாக இருந்து பின்னா் கடல் உள்வாங்கப் பெற்று நிலமாக மாறியதற்கு சான்றாக இக்கோயிலைச் சுற்றிலும் காணப்படும் பாறைப்படிவுகளில் புதை படிவங்கள் என்கிற கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்கள் காணப்படுகின்றன.
சோழா்கள், பாண்டியா்கள், நாயக்கா்கள் எனப் பல்வேறு மரபு மன்னா்களின் போற்றுதலில் இருந்த இக்கோயில் இன்று பழுதடைந்துள்ளது. இருப்பினும் அவ்வூா் மக்கள் அவ்வப்போது சென்று விளக்கேற்றி வழிபட்டு வருகின்றனா் என்றாா் மணி. மாறன், கோ. தில்லை கோவிந்தராஜன்.

கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள்.

கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள்.

கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








