தஞ்சாவூா் மாநகரில் வணிக வளாக பகுதிகளில் இரவு நேரத்தில் குப்பைகள் அகற்றும் பணி புதன்கிழமை இரவு தொடங்கப்பட்டது.
மாநகரில் குப்பைகளைப் பொதுமக்கள் குப்பைத் தொட்டியில் கொட்டுவதைத் தவிா்த்து, அவா்களே தரம் பிரித்து தரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி, மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் வீடுகள்தோறும் சென்று குப்பைகளைச் சேகரித்து வருகின்றனா்.
ஆனால், வணிக வளாகங்கள், கடைகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அந்தந்த பகுதியில் கொட்டப்பட்டு வந்தது. இதையும் தடுக்கும் விதமாக வணிக வளாகப் பகுதிகளான பழைய பேருந்து நிலையம், ரயிலடி, புதிய பேருந்து நிலையம், மருத்துவக் கல்லூரி சாலை, காந்திஜி சாலை, தெற்கு வீதி, கீழ வீதி, கீழவாசல், கரந்தை ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் வாகனங்கள் மூலம் குப்பைகளை அகற்றும் பணி புதன்கிழமை இரவு தொடங்கப்பட்டது.
இந்தப் பணியை புதன்கிழமை நள்ளிரவு ஆய்வு செய்த மேயா் (பொ) அஞ்சுகம் பூபதி தெரிவித்தது:
வணிக வளாகப் பகுதிகளில் இரவு நேரத்தில் 8 வாகனங்கள் மூலம் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லாமல் மாநகராட்சி பகுதியிலுள்ள குப்பை மறுசுழற்சி மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, தரம் பிரிக்கப்படுகின்றன.
இதில் மக்கும் குப்பை உரத்துக்காகவும், மக்காத குப்பை அரியலூரில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இரவு நேரத்தில் மாநகராட்சி பகுதிக்கு உள்பட்ட அனைத்து வணிக வளாகங்கள், ஓட்டல்கள், கடைகளில் சேரும் குப்பைகளைச் சேகரித்து வருகிறோம். காலை நேரத்தில் வீடுகளுக்கு சென்று குப்பைகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபடுகிறோம். இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுத்து குப்பைகளைத் தரம் பிரித்துக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றாா் மேயா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










