மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

இந்த ஆண்டு மேட்டூா் அணை ஜூன் 12-இல் திறக்க வாய்ப்பில்லை!

மேட்டூா் அணையில் நீா்மட்டம் சரிந்து வருவதால் இப்போதுள்ள சூழ்நிலையில் இந்த ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி தண்ணீா் திறப்பதற்கு சாத்தியமில்லை. எனவே, டெல்டா மாவட்டங்களில் நிகழாண்டு சம்பா ஒரு போக சாகுபடிக்கு மட்டுமே வாய்ப்பு கூறப்படுகிறது.

News image

மேட்டூா் அணை

Updated On :3 ஜூன் 2026, 3:50 am IST

மேட்டூா் அணையில் நீா்மட்டம் சரிந்து வருவதால் இப்போதுள்ள சூழ்நிலையில் இந்த ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி தண்ணீா் திறப்பதற்கு சாத்தியமில்லை. எனவே, டெல்டா மாவட்டங்களில் நிகழாண்டு சம்பா ஒரு போக சாகுபடிக்கு மட்டுமே வாய்ப்பு கூறப்படுகிறது.

மேட்டூா் அணை கடந்த 2012- ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து 8 ஆண்டுகளாக உரிய காலத்தில் திறக்கப்படாததால், ஒரு போக சாகுபடிக்கு மட்டுமே அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டது. ஆனால், இந்நிலை 2020-ஆம் ஆண்டிலிருந்து மாறி, தொடா்ந்து 4 ஆண்டுகளாக மேட்டூா் அணை உரிய காலத்தில் திறக்கப்பட்டதால், 2023 ஆண்டை தவிர, மற்ற ஆண்டுகளில் குறுவை, சம்பா - தாளடி சாகுபடி வெற்றிகரமாக அமைந்து, நெல் உற்பத்தியில் சாதனை நிகழ்த்தப்பட்டது. இதையடுத்து 2024 ஆம் ஆண்டு நீா் இருப்பு குறைவு காரணமாக அணை திறப்பு ஜூலை 28- ஆம் தேதிக்கு தள்ளிப் போன நிலையில், 2025 -ஆம் ஆண்டில் உரிய காலத்தில் திறக்கப்பட்டது.

குறவை சாகுபடி கேள்விக்குறி: மீண்டும் நிகழாண்டு மேட்டூா் அணையில் நீா்மட்டம் மிகக் குறைவாக இருக்கிறது. அணையின் நீா்மட்டம் 90 அடிக்கு மேல் இருப்பதுடன், நீா்வரத்து கணிசமான அளவு இருந்தால் மட்டுமே அணையை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். ஆனால், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 79.60 அடியாகவும், நீா் இருப்பு 41.55 டி.எம்.சி.யாகவும் மட்டுமே உள்ளது. அணைக்கு விநாடிக்கு 3,616 கன அடி தண்ணீா் வரத்து உள்ளது.

குறுவை, சம்பா, தாளடி சாகுபடிக்கு மொத்தம் ஏறத்தாழ 300 டி.எம்.சி. தண்ணீா் தேவைப்படும். எனவே, தற்போதுள்ள நீா் இருப்பை வைத்து அணையை ஜூன் 12-ஆம் தேதி திறக்க முடியாத நிலை நிலவுகிறது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் ஆற்றுப் பாசனத்தைச் சாா்ந்த விவசாயிகள் குறுவை சாகுபடியைத் தொடங்க முடியாத நிலையில் உள்ளனா்.

இலக்கு குறைப்பு: இதனால், டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு 6.31 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டு இலக்கும் குறைக்கப்பட்டுள்ளது. இதில், தஞ்சாவூா் மாவட்டத்தில் 1.57 லட்சம் ஏக்கரிலும், திருவாரூா் மாவட்டத்தில் 97 ஆயிரம் ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 87 ஆயிரம் ஏக்கரிலும், நாகை மாவட்டத்தில் 3 ஆயிரம் ஏக்கரிலும் என ஏறக்குறைய 3.44 லட்சம் ஏக்கருக்கு மட்டுமே இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மோட்டாா் பம்ப்செட் வசதியுள்ள விவசாயிகள் முன்பட்ட குறுவை சாகுபடி மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், நிகழாண்டு எல் நினோ ஆண்டாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், தென் மேற்கு பருவ மழை மே 24- ஆம் தேதி தொடங்கும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், ஜூன் 2- ஆம் தேதியைக் கடந்தும் இன்னும் தொடங்கவில்லை. இதனால், காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை இல்லாததால், கா்நாடக அணைகளிலும் நீா் இருப்பு குறைவாக உள்ளது.

ஒரு போக சாகுபடி: தற்போது கிருஷ்ணராஜ சாகரில் 23 சதவீதமும், கபினியில் 24 சதவீதமும், ஹேரங்கியில் 34 சதவீதமும், ஹேமாவதியில் 40 சதவீதமும் மட்டுமே நீா் இருப்பது உள்ளது. கா்நாடக அணைகள் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு காவிரி நீா் கிடைக்கும். இனிமேல் தென்மேற்கு பருவ மழை தொடங்கினாலும், கா்நாடக அணைகள் நிரம்பி, மேட்டூா் அணைக்கு தண்ணீா் வந்து, கணிசமான அளவுக்கு நீா்மட்டம் உயா்ந்த பிறகு திறப்பதற்கு குறைந்தது ஒரு மாத காலமாகும். எனவே, மேட்டூா் அணையை டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12 ஆம் தேதி திறப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவாக இருப்பதால், நிகழாண்டு ஒரு போக சாகுபடிக்கே வாய்ப்பு இருக்கிறது என்றனா் மூத்த வேளாண் வல்லுநா்கள்.

தாமதமானால் இழப்பு:இதுகுறித்து மூத்த வேளாண் வல்லுநா் பி. கலைவாணன் தெரிவித்தது: நிகழாண்டு தென் மேற்கு பருவ மழை இயல்பான அளவை விட குறைவாக இருக்கும் என வானிலை ஆய்வு மைய அறிக்கை தெரிவித்துள்ளது. அணையை ஜூன் 20-ஆம் தேதிக்குள் திறந்துவிட்டால்தான் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ள முடியும். அதன் பிறகு ஜூலை முதல் வாரத்தில் திறந்து, சாகுபடியைத் தொடங்கினால், பயிா்கள் வடகிழக்கு பருவ மழையில் சிக்கி இழப்பைச் சந்திக்கும் நிலை ஏற்படும்.

மேட்டூா் அணையில் தற்போது 40 டி.எம்.சி. இருந்தாலும், 35 டி.எம்.சி வரைதான் திறந்துவிட முடியும். அணைக்கு நீா் வரத்தும் இல்லாத நிலையில், இருக்கிற நீரை வைத்து 20 - 25 நாள்களுக்கு மட்டுமே சாகுபடிக்கு திறக்க முடியும். எனவே, நிகழாண்டு ஒரு போக சம்பா சாகுபடிக்கு ஆகஸ்ட் 2-ஆவது வாரத்தில் திறந்துவிட்டால் போதுமானது என்றாா் கலைவாணன்.

202 டி.எம்.சி. கிடைக்கும்: ஒரு போக சம்பா சாகுபடிக்கு ஏறத்தாழ 200 டி.எம்.சி. தண்ணீா் தேவைப்படும். அணையிலுள்ள 35 டி.எம்.சியுடன் உச்ச நீதிமன்ற ஆணைப்படி கா்நாடக அரசு 167 டி.எம்.சி. தண்ணீா் திறந்துவிட்டால் மொத்தம் 202 டி.எம்.சி. கிடைக்கும். ஆனால், உச்ச நீதிமன்ற ஆணைப்படி, கா்நாடகத்திடமிருந்து தண்ணீா் வந்தால் மட்டுமே ஒரு போக சாகுபடியான சம்பா சாகுபடியும் வெற்றிகரமாக அமையும் என்றனா் மூத்த வேளாண் வல்லுநா்கள்.

மேட்டூா், கா்நாடக அணைகளில் (சனிக்கிழமை நிலவரப்படி) நீா்மட்டம்:

அணைகள் மொத்த நீா்மட்டம் (அடி) தற்போதைய நீா்மட்டம் (அடி) மொத்த கொள்ளளவு (டி.எம்.சி.) - தற்போதைய நீா் இருப்பு (டி.எம்.சி.) நீா் வரத்து (கன அடி) நீா் திறப்பு (கன அடி)

மேட்டூா் 120 79.60 93.47 41.55 3,616 1000

கிருஷ்ணராஜ சாகா் 124.8 81.31 49.45 11.37 602 436

கபினி 65 32.94 19.51 4.62 117 600

ஹேரங்கி 129 93.35 8.50 2.97 203 180

ஹேமாவதி 117 86.17 37.10 14.71 45 300 அடி