பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

பயிா்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினா் உண்ணாவிரதம்

News image

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே திங்கள்கிழமை நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் பேசிய தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் எல். பழனியப்பன்.

Updated On :23 ஜூன் 2026, 12:22 am IST

பயிா்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி தஞ்சாவூரில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் எல். பழனியப்பன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் கே. செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா்.

இதில், தோ்தல் அறிக்கையில் தவெக கொடுத்த வாக்குறுதியின்படி, விவசாயிகளின் கூட்டுறவு பயிா்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் கா்நாடக அரசு கட்டும் தடுப்பணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது.

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி, காவிரியில் தமிழகத்துக்குரிய மாதாந்திர நீா் பங்கீட்டை உடனே வழங்க வேண்டும். விவசாயிகள் விளைவித்த நெல்மணிகளை தமிழக அரசு உரிய முறையில் பாதுகாக்க வேண்டும். குறுவை தொகுப்புத் திட்டத்துக்கு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

ஆழ்குழாய் மூலம் பயிா் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பயிா் கடன்களை உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசு உயா்த்தியுள்ள உரங்களின் விலையைத் திரும்பப் பெற வேண்டும். வருகிற கொள்முதல் பருவத்தில் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 3 ஆயிரத்து 500 விலையைத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டத்தில், தமிழ்நாடு காவிரி உழவா்கள் பாதுகாப்புச் சங்கச் செயலா் சுந்தர. விமல்நாதன், சங்கத்தின் மாவட்டச் செயலா்கள் எம். மணி, ரவிச்சந்திரன், தெற்கு மாவட்டப் பொருளாளா் சௌந்தர்ராஜன், மாநகரச் செயலா் அறிவு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.