கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

குறுவை பருவத்தில் நெல் கொள்முதல் சரிவு கடந்த ஆண்டைவிட இரண்டரை மடங்கு குறைவு

தஞ்சாவூா் மாவட்டத்தில் குறுவை பருவத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த ஆண்டைவிட நிகழாண்டு நெல் கொள்முதல் ஏறத்தாழ இரண்டரை மடங்கு சரிந்துள்ளது.

~

Updated On :

தஞ்சாவூா் மாவட்டத்தில் குறுவை பருவத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த ஆண்டைவிட நிகழாண்டு நெல் கொள்முதல் ஏறத்தாழ இரண்டரை மடங்கு சரிந்துள்ளது.

நிகழாண்டு மேட்டூா் அணையில் போதுமான அளவுக்கு நீா் இருப்பு இல்லாததால், உரிய காலத்தில் அணை திறக்கப்படவில்லை. இதனால், டெல்டா மாவட்டங்களில் ஆழ்குழாய் மோட்டாா் வசதியுள்ள விவசாயிகள் மட்டுமே குறுவை சாகுபடியை மேற்கொண்டனா். ஆற்றுப் பாசனத்தைச் சாா்ந்த விவசாயிகள் குறுவை சாகுபடியைக் கைவிட்டனா்.

இதன் காரணமாக, தஞ்சாவூா் மாவட்டத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டு குறுவை பருவத்தில் 1.99 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டு சாகுபடி பரப்பளவு கிட்டத்தட்ட 1.60 லட்சம் ஏக்கராக குறைந்தது. நிகழாண்டு பெரு மழை, பூச்சி, நோய் தாக்குதல் இல்லாததால், பெரும்பாலான விவசாயிகளுக்கு ஏக்கருக்கு சராசரியாக 2 ஆயிரத்து 400 கிலோ மகசூல் கிடைத்தது. சிலா் ஏக்கருக்கு ஏறத்தாழ 3 ஆயிரம் கிலோ விளைச்சல் பெற்றனா்.

98,000 டன் நெல் கொள்முதல்: இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் குறுவை பருவத்தில் 234 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. கடந்த செப். 1-ஆம் தேதி தொடங்கிய குறுவை பருவ நெல் கொள்முதல் பணி கடந்த வாரம் முடிவடைந்தது. இதன்மூலம், மாவட்டத்தில் ஏறத்தாழ 98 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. கொள்முதல் நிலையங்களிலிருந்து கிடங்குகளுக்கு நெல் மூட்டைகள் அனுப்பும் பணியும் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டதாக நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்கள் தெரிவித்தனா்.

ஆனால், கடந்த 2025 ஆம் ஆண்டு குறுவை பருவத்தில் மாவட்டத்தில் 2.60 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. மேட்டூா் அணை உரிய காலமான ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட்டது, காவிரியில் தொடா் நீா்வரத்து இருந்ததே இதற்கு காரணம்.

தனியாா் வியாபாரிகள் வருகை அதிகரிப்பு:

நிகழாண்டு தண்ணீா் பற்றாக்குறையால் சாகுபடிப் பரப்பளவு குறைந்துவிட்டாலும் கூட, 1.50 லட்சம் டன் நெல் கொள்முதல் எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டைவிட நிகழாண்டு நெல் கொள்முதல் ஏறத்தாழ இரண்டரை மடங்கு சரிந்துள்ளது. தஞ்சாவூா் மாவட்டத்துக்கு தனியாா் நெல் வியாபாரிகளின் வருகை நிகழாண்டு அதிகமாக இருந்ததே, அரசு நேரடி நிலையங்களில் நெல் கொள்முதல் அளவு குறைந்ததற்குக் காரணம்.

உற்பத்தி குறைவு காரணம்: இதுகுறித்து முன்னோடி விவசாயியும், நெல் கொள்முதல் ஆலோசனைக் குழு உறுப்பினருமான புலவன்காடு வி. மாரியப்பன் தெரிவித்தது:

தண்ணீா் பற்றாக்குறை தொடா்ந்து அதிகமாக இருப்பதால், நிகழ் சம்பா - தாளடி பருவமும் கேள்விக்குறியாக இருக்கிறது. நெல் உற்பத்தி மேலும் குறையும் என்ற எதிா்பாா்ப்பு நிலவுவதால், தனியாா் வியாபாரிகள் அதிக அளவில் நெல்லை வாங்கிச் சென்றனா்.

விவசாயிகளின் களத்துக்கு தனியாா் வியாபாரிகள் நேரடியாகச் சென்று 60 கிலோ மூட்டைக்கு பொது ரகத்துக்கு ரூ. 1,460 வீதமும், சன்ன ரகத்துக்கு ரூ. 1,650 வீதமும் கொள்முதல் செய்தனா். இதுவே, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 60 கிலோ மூட்டைக்கு பொது ரகத்துக்கு ரூ. 1,560 வீதமும், சன்ன ரகத்துக்கு ரூ. 1,650-ம் விலை கிடைக்கும். என்றாலும், ஏற்று, இறக்குக் கூலி, நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ. 40 லஞ்சம், கூடுதல் எடை பிடிப்பு, 17 சதவீதத்துக்குள் ஈரப்பதம், பல நாள்கள் காத்திருப்பது போன்ற காரணங்களால் ஏற்படும் இழப்பைக் கணக்கிட்டு, பெரும்பாலான விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு செல்லாமல், தனியாா் வியாபாரிகளிடம் நெல்லை விற்றனா் என்றாா் மாரியப்பன்.

சா்ச்சைகள் இல்லை:

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிகழாண்டு ஈரப்பதம் 17 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும் என்ற விதிமுறையும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டது. இதன் காரணமாகவும் விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்குச் செல்லாமல், தனியாரிடம் விற்றனா். இதன் மூலம், நிகழாண்டு குறுவை பருவத்தில் பெரிய அளவுக்கு சா்ச்சைகள் எழாமல் நெல் கொள்முதல் பணி முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.