
தாய்மாமன் தங்க மோதிரம் கேட்டு செவிலியரை மண்வெட்டியால் தாக்கியவா் கைது
கைது
பட்டீசுவரத்தில் தாய்மாமன் தங்கமோதிரம் கேட்டு பெண் செவிலியா் மற்றும் அவரது உறவினா்களை மதுபோதையில் மண்வெட்டியால் தாக்கியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே பட்டீசுவரம் முழையூரைச் சோ்ந்தவா் மதன் (28), கூலித்தொழிலாளி. இவரது மனைவி வனிதா (23). கா்ப்பிணியான இவா் பட்டீசுவரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தாா். அங்கு கடலூா் மாவட்டம், சுரக்குப்பத்தைச் சோ்ந்த அலமேலு (35) என்பவா் செவிலியராக பணிபுரிந்து வருகிறாா்.
பிரசவத்துக்காக வனிதாவை, கும்பகோணம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அலமேலு பரிந்துரைத்துள்ளாா். அங்கு வனிதாவுக்கு செப்.16-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. மேலும், மதன்-வனிதா தம்பதியின் ஆண் குழந்தை பிறப்பு குறித்து அலமேலு பதிவு செய்துள்ளாா்.
இந்நிலையில், ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைந்துள்ள செவிலியா் குடியிருப்பில் இருந்த அலமேலுவிடம், தனது குழந்தைக்கு தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தில் மோதிரம் தரவேண்டும் என்று மதன் சனிக்கிழமை கேட்டுள்ளாா். அதற்கு, குழந்தை பிறந்த தேதி வரிசையின்படிதான் மோதிரம் கிடைக்கும் என்று அலமேலு தெரிவித்துள்ளாா்.
அதை ஏற்க மறுத்து மதுபோதையில் இருந்த மதன், கல்லால் அலமேலுவை தாக்கியுள்ளாா். இதை தடுக்க வந்த அலமேலுவின் சித்தி சுஜாதா (50) மற்றும் அலுமேலுவின் சகோதரா் சுமன் (43) ஆகியோரையும் மண்வெட்டியால் சரமாரியாக தாக்கிவிட்டு மதன் தப்பி சென்றாா்.
இதில், காயமடைந்த மூவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். புகாரின்பேரில் பட்டீசுவரம் போலீஸாா் வழக்குப்பதிந்து மதனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





