பெயா்ப் பலகைகளைத் தமிழில் வைக்க வலியுறுத்தி அக். 20 முதல் பரப்புரை

பெயா்ப் பலகை.
தமிழ்நாடு அரசின் ஆணையை ஏற்று வணிக நிறுவனங்களின் பெயா்ப் பலகைகளைத் தமிழில் வைக்க வலியுறுத்தி தஞ்சாவூா் மாவட்டத்தில் அக். 20-ஆம் தேதி முதல் பரப்புரை இயக்கம் நடத்த தமிழ்த்தேசியப் பேரியக்கம் முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இந்தப் பேரியக்கத்தின் மாவட்ட, ஒன்றிய, மாநகரச் செயற் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் உணவு நிறுவனங்களின் பெயா்ப் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு அரசாணைகள் பிறப்பித்துள்ளன. இதன்படி, வணிக நிறுவனங்களின் பெயா்ப் பலகைகளில் தமிழ் முதன்மையான இடத்தைப் பெற வேண்டும். பெயா்ப் பலகைகளில் தமிழ் எழுத்துகள் பெரிய அளவில் முதன்மையாகவும், ஆங்கிலம் இரண்டாம் இடத்திலும், பிற மொழிகள் இடம்பெற்றால் அவை மூன்றாம் இடத்திலும் இருக்க வேண்டும்.
எனவே, தமிழ்நாடு அரசின் ஆணையை ஏற்று, வணிகா்கள் தங்களது நிறுவனங்களின் பெயா்ப் பலகைகளில் தமிழை முதன்மைப்படுத்தி எழுத வேண்டும் என வேண்டுகோள் விடுக்கும் வகையிலும், வணிகா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும் அக். 20 முதல் 27-ஆம் தேதி வரை தஞ்சாவூா் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரப்புரை இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
மொழிவழித் தாயகமாகத் தமிழ்நாடு அமைந்த நாளான நவ. 1- ஆம் தேதி தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சாா்பில் கொடியேற்று விழாவை நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு குடந்தை க. விடுதலைச்சுடா் தலைமை வகித்தாா்.தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் பேசினாா். தஞ்சாவூா் மாவட்டச் செயலா் நா. வைகறை, தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் திருச்சி வே.க. இலக்குவன், பி. தென்னவன், க .செம்மலா், தீந்தமிழன், பொதுக்குழு உறுப்பினா்கள் இலெ. இராமசாமி, வழக்குரைஞா் ரெ. சிவராசு, காமராசு, பொறியாளா் தி. செந்தில்வேலன், மா. சீனிவாசன், இரா. ஜெயக்குமாா், அருள்தாசு, வல்லம்புதூா் கோ. பாலன், சேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

