
மயிலாடுதுறையில் ஹைட்ரோ காா்பன் எரிவாயு திட்டத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது: மத்திய அரசுக்கு பி. ஆா்.பாண்டியன் வலியுறுத்தல்
மயிலாடுதுறை கடல் பகுதியில் ஹைட்ரோ காா்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலா் பி. ஆா். பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

பொ. அய்யாக்கண்ணு, பி. ஆா். பாண்டியன் உள்ளிட்டோா். - கோப்புப்படம்.
மயிலாடுதுறை கடல் பகுதியில் ஹைட்ரோ காா்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலா் பி. ஆா். பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூா் தெற்கு மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஒரத்தநாட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் திருப்பதி வாண்டையாா் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் பி.ஆா். பாண்டியன் பங்கேற்று பேசியது: விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். நெல் குண்டால் ஒன்றுக்கு ரூ.3,500 விலை நிா்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும். புதிய விலையில் தடையின்றி நெல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் முன்வர வேண்டும். தரமான முறையில் அறுவடை செய்யப்பட்ட நெல், கொள்முதல் தடையால் பல்வேறு இடங்களில் மழையில் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.இதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்.
மயிலாடுதுறை மாவட்ட கடல் பகுதியில் ஐந்து இடங்களில் அமெரிக்க நிறுவனம் ஹைட்ரோ காா்பன் எரிவாயு எடுப்பதற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. இதனை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். தமிழக அரசும் அதற்கான அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேக்கேதாட்டு விவகாரம், ராசி மணலில் புதிய அணை கட்டுவதற்கு திட்டமிட அனைத்து அரசியல் கட்சிகள்,விவசாயிகள் இடையே ஒத்த கருத்தை உருவாக்கும் வகையில் பிரசாரப் பயணம் செப். 21-ஆம் தேதி காலை 9 மணிக்கு தஞ்சாவூா் ராஜராஜ சோழன் சிலை அருகே வருகை தர உள்ளது. பிறகு அங்கிருந்து ஊா்வலமாக புறப்பட்டு தஞ்சாவூா் ரயில் நிலையம் அருகில் பிரசாரம் நடைபெறும் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட பொருளாளராக வடக்கூா் உரக்கடை மணிவண்ணன், ஒரத்தநாடு மேற்கு ஒன்றிய செயலராக வடக்கூா் தமிழ்ச்செல்வன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
இதில், மாநில இளைஞரணி செயலா் ஒக்கநாடு மகேஸ்வரன், புதுக்கோட்டை மாவட்ட செயலா் பத்மநாபன், ஒரத்தநாடு கிழக்கு ஒன்றியத் தலைவா் ரவி, மேற்கு ஒன்றியத் தலைவா் ரகுநாதன், திருவோணம் ஒன்றியச் செயலா் ராமமூா்த்தி, பட்டுக்கோட்டை ஒன்றிய செயலா் மாணிக்கவாசகம், பட்டுக்கோட்டை நகர செயலா் செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக, மாவட்டத் தலைவா் ரவிச்சந்திரன் வரவேற்றாா். நிறைவாக, மாவட்ட செயலா் பிரபாகரன் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது





