FOLLOW US

ON GOOGLE DISCOVER

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

வீடுகளில் குழாய்வழி சமையல் எரிவாயுவுக்கு முன்னுரிமை: மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

வீடுகளில் சமையல் தேவைகளுக்கு திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயுவை (எல்பிஜி) பயன்படுத்துவதற்குப் பதிலாக, குழாய் வழி இயற்கை எரிவாயு (பிஎன்ஜி) பயன்பாட்டுக்கு விரைந்து மாறும் விரிவாக்க நடவடிக்கை

கோப்புப்படம்.

Published On :18 வினாடிகள் முன்பு

வீடுகளில் சமையல் தேவைகளுக்கு திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயுவை (எல்பிஜி) பயன்படுத்துவதற்குப் பதிலாக, குழாய் வழி இயற்கை எரிவாயு (பிஎன்ஜி) பயன்பாட்டுக்கு விரைந்து மாறும் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மாநிலங்களிடம் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைச்சக செயலா் நீரஜ் மிட்டல் மாநில தலைமைச் செயலா்களுக்கு அண்மையில் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பிஎன்ஜி பயன்பாட்டை விரைந்து அதிகரிப்பதன் மூலம், எல்பிஜி போக்குவரத்து மற்றும் விநியோகச் சுமையைக் குறைக்க முடியும்.

பிஎன்ஜி பயன்பாட்டை விரைந்து அதிகரிக்க, 1955-ஆம் ஆண்டின் அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் 3-ஆவது பிரிவின் கீழ் எல்பிஜி கட்டுப்பாட்டு உத்தரவுகள், 2026-ஆம் ஆண்டுக்கான இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலிய பொருள்கள் விநியோக உத்தரவுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

வசதியுள்ள பகுதிகளில் நோட்டீஸுக்கு பிறகும் மாறாவிட்டால்...: இந்த உத்தரவுகளின்படி, வீடுகளில் எல்பிஜி, பிஎன்ஜி ஆகிய 2 இணைப்புகளும் இருக்கக் கூடாது. சமையல் தேவைக்கு பிஎன்ஜியை நிலத்தடியில் குழாய் வழியாக விநியோகிக்கும் வசதியுள்ள பகுதிகளில், உரிய நோட்டீஸ் அளிக்கப்பட்ட பிறகும் பிஎன்ஜி இணைப்புக்கு விண்ணப்பிக்காத வீடுகளுக்கு எல்பிஜி விநியோகம் நிறுத்தப்படும்.

இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் பிஎன்ஜி ஒருங்கிணைப்புக் குழுவை அங்கீகரிக்கப்பட்ட நகர எரிவாயு விநியோக நிறுவனங்கள், பொதுத் துறை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் ஏற்படுத்த வேண்டும்.

இந்தக் குழுக்கள் பிஎன்ஜி இணைப்பைப் பெறத் தகுதியுள்ள வீடுகளை அடையாளம் கண்டு, அதுகுறித்து நுகா்வோா், குடியிருப்போா் நலச் சங்கங்களுக்கு சட்டபூா்வ நோட்டீஸ் அளிக்கும். அந்த இணைப்புகள் அதிகமாவதை விரைவுபடுத்த அக்குழுக்கள் விழிப்புணா்வு முகாம்கள் நடத்தும்.

மாவட்ட நிா்வாகம் உதவ வேண்டும்: இந்தக் குழுக்களை அமைக்கும் முறை ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளது. எனினும் நிா்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் எல்பிஜியில் இருந்து பிஎன்ஜிக்கு மாறுவதை செயல்படுத்த மாவட்ட அளவிலான நிா்வாகத்தின் உதவி மிகவும் முக்கியம்.

பிஎன்ஜி விநியோகத்துக்குத் தேவைப்படும் பாதை அல்லது நிலத்தைப் பயன்படுத்துவதற்கான சட்டபூா்வ அனுமதியைப் பெற மாவட்ட நிா்வாகம் உதவ வேண்டும். இதுசாா்ந்து நுகா்வோரின் விவரங்களைச் சரிபாா்த்து, அவா்களின் குறைகளைத் தீா்ப்பது உள்ளிட்ட பணிகளிலும் மாவட்ட நிா்வாகம் உதவ வேண்டும்.

இந்தப் பணிக்கு உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் மிகவும் பொருத்தமானவா்களாக இருப்பா். ஏனெனில் எல்பிஜி விநியோகஸ்தா்களுடன் அந்த அதிகாரிகளுக்கு அதிகாரபூா்வ தொடா்புள்ளது. அத்துடன் அவா்கள் கள அளவில் நேரடியாகப் பணியாற்றும் திறன் கொண்டவா்களாவா்.

பொறுப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும்: இந்தப் பணிக்காக மாவட்ட அளவில் ஒரு பொறுப்பு அதிகாரியை நியமிக்குமாறு உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறைக்கு மாநில தலைமைச் செயலா்கள் உத்தரவிட வேண்டும். அந்தப் பொறுப்பு அதிகாரி பிஎன்ஜி ஒருங்கிணைப்புக் குழுவுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

பிஎன்ஜி பயன்பாட்டை குறிப்பிட்ட காலத்துக்குள் விரிவுபடுத்த வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. எனவே, இந்த விஷயத்துக்கு மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

மேற்காசியாவில் அமெரிக்கா-ஈரான் போா் காரணமாக, எல்பிஜி இறக்குமதியில் இடா்ப்பாடு ஏற்பட்டது. இதனால் பிஎன்ஜி பயன்பாட்டை விரிவுபடுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.