பெ.நா. மாறன்
எப்போதெல்லாம் உலக அளவில் அரசியல் சிக்கல்கள் ஏற்படுகின்றனவோ, அப்போதெல்லாம் முதன்மையாகப் பாதிக்கப்படுவது கச்சா எண்ணெய், எரிவாயு உற்பத்தி. அவற்றின் பயன்பாடு உலகத்தின் அனைத்து நாடுகளிலும் இருந்தாலும், உற்பத்தி சில நாடுகளில் மட்டுமே இருப்பதால், அவற்றின் விநியோகம், வணிகம், ஏற்றுமதி ஆகியவற்றில் எப்போது சிக்கல் ஏற்பட்டாலும், பல நாடுகளின் பொருளாதாரம் ஆட்டம் காண்கிறது.
அப்படிப்பட்ட நிலை ஏற்படும் ஒவ்வொரு முறையும் "நாம் ஏன் வெளிநாட்டை நம்பி இருக்க வேண்டும்? நம்மிடம் இல்லாத வளமா? நம்மிடம் இருக்கும் கால்நடை வளங்களை சரியாக பராமரித்தால், "சாண எரிவாயு' தயார் செய்து, மொத்த தேவைக்கும் உபயோகப்படுத்திக் கொள்ளலாமே?' என்ற புரட்சிகரமான பிரசாரங்கள் நடைபெறுவது வழக்கம்.
புவிசார் அரசியல் பிரச்னைகள் ஒரு முடிவுக்கு வந்து சிலிண்டர்கள் தடையின்றிக் கிடைக்க ஆரம்பித்த மறுகணம் அந்த வேகமெல்லாம் தணிந்துபோய் சிலிண்டர் விலை அதிகரித்ததற்கு கண்டனம் தெரிவித்து விட்டு அரசியலின் அடுத்தக் காட்சியை ரசிக்கப் போய்விடுவது நம் தேசியப் பழக்கம்.
அதன் நடைமுறை சாத்தியம் குறித்து தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.
தமிழ்நாட்டில் குறிப்பாக, புறநகர் மற்றும் கிராமப் பகுதிகளில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதானமாக இருப்பதால், சாண எரிவாயுக் கலன் அமைக்கத் தேவையான சாணம் எளிதாகக் கிடைக்கும். வீட்டின் பின்புறம் சிறிய அளவு இடம் இருந்தால் போதும். ஒரு முறை முதலீடு செய்தால், 15 முதல் 20 ஆண்டுகள் வரை எரிவாயு சிலிண்டர் வாங்கும் செலவு மிச்சமாகும்.
எரிவாயு எடுத்த பிறகு வெளிவரும் கழிவுப் பயிர்களுக்கு மிகச் சிறந்த நைட்ரஜன் கலந்த இயற்கை உரம் ஆகும். முன்பு சாண எரிவாயு கலன்கள், செங்கல் மற்றும் சிமென்ட்டால் பெரிய அளவில் கட்டப்பட்டன. இப்போது எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய உயிரி வாயு கலன்கள் பிரபலம். இவை சிறிய இடத்தில்கூட இரண்டு நாள்களுக்குள் நிறுவப்படக் கூடியவை.
இவ்வளவு எளிதான விஷயமாக இருந்தும், இவை ஏன் பெரிய அளவில் பிரபலமாகவில்லை?
சாண எரிவாயுத் திட்டங்கள் பொதுவாக தோல்வியடைவதற்கு முக்கியக் காரணம், சரியான பராமரிப்பு இல்லாமை மட்டுமே. எல்பிஜி சிலிண்டரில் உள்ள எரிவாயுவின் எரிசக்தியுடன் (கன மீட்டருக்கு 10,000- 11,000 கிலோ கலோரி) ஒப்பிட்டால், சாண எரிவாயுவின் எரிசக்தி அதில் பாதியே (கன மீட்டருக்கு 4,500- 5,500 கிலோ கலோரி).
சராசரியாக, ஒரு வீட்டுக்கு ஒரு கனமீட்டர் இயற்கை எரிவாயு தேவை. அதுவே சாண எரிவாயு என்றால் இரண்டு கனமீட்டர் தேவை. மாதம் ஒரு சிலிண்டர் உபயோகிக்கும் ஒரு குடும்பத்துக்கு சாண எரிவாயு வேண்டுமென்றால், மூன்று முதல் நான்கு மாடுகளின் சாணம் தினமும் அவசியம். அத்தனை மாடுகள் இருக்கும் வீடுகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். அதுவன்றி, ஒவ்வொரு வீட்டிலும் சாண எரிவாயு உற்பத்திக் கலன்கள் அமைப்பதிலும் தினமும் பராமரிப்பு செய்வதிலும் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. அதற்குப் பதிலாக மாடுகள் அதிகம் உள்ள கிராமங்களில், கூட்டுறவு முறையில் எல்லா வீடுகளிலிருந்தும் சாணம் சேகரிப்பு செய்யப்பட்டு, ஒரு மைய நிலத்தில் சாண எரிவாயு தயாரிக்கப்பட்டு, அருகில் உள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் வழங்குவதில் நடைமுறைச் சிக்கல் குறைவாக இருக்கும்.
சாண எரிவாயு உற்பத்திக்கு மிகவும் பொருத்தமானவை, மாடு, ஆடு மற்றும் கோழிகளின் கழிவுகள். மாட்டுச் சாணத்தைவிட ஆட்டின் புழுக்கையும், அதையும்விட கோழியின் எச்சமும் அதிக எரிவாயுவை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. எரிவாயு தயாரிப்பதற்கு ஒரு மாட்டின் சாணம், 20 ஆடுகளின் புழுக்கைக்கு அல்லது 100 கோழிகளின் எச்சத்துக்குச் சமம்.
லைவ் ஸ்டாக் சென்சஸ் 2024-25 என்று சொல்லப்படும் அண்மைக்கால கால்நடை கணக்கெடுப்பின் மாநில வாரியான இறுதி முடிவுகள் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. முந்தைய 2019-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மொத்த மாடுகளின் எண்ணிக்கை ஒரு கோடி; ஆடுகள் 1.5 கோடி; கோழிகள் 12 கோடி.
சாண எரிவாயு உற்பத்திக் கணக்குக்காக இவை அனைத்தையும் மாடுகளின் அடிப்படையில் மாற்றினால் சுமார் 1.2 கோடி மாடுகள் தர முடிகிற சாணத்தை இவை அனைத்தும் சேர்ந்து தரும். இவற்றின்மூலம் உற்பத்தியாகும் எரிவாயு சுமார் 35 லட்சம் வீடுகளுக்கு ஆண்டு முழுவதுக்கும் போதுமானது.
இந்தக் கணக்கீடு மொத்த மாநிலத்தில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பிருந்த கால்நடைகளின் எண்ணிக்கை அடிப்படையிலானது. தற்போதைய நிலையில் மிகவும் கூடுதலாக இருக்கும். பரவலாக இருக்கும் இந்தக் கால்நடைகளின் இருப்பிடங்களைப் பொருத்து அவற்றின் கழிவுகளை அதிகபட்ச உபயோகத்துக்குத் திட்டமிட்டால் இவ்வளவு எரிவாயு உற்பத்திக்கான சாத்தியம் உள்ளது என்பது கண்முன் தெரியும் உண்மை.
சென்னை சேத்துப்பட்டில் காய்கறிக் கழிவுகளில் இருந்து உயிரி எரிவாயு தயாரிக்கும் ஒரு நிறுவனத்துக்கு முதல்வர் ஜோசப் விஜய் கடந்த ஜூலை மாதம் 20-ஆம் தேதி நேரில் சென்று ஆய்வு செய்ததில் இருந்து இத்தகைய முயற்சிகளின் ஒட்டுமொத்த பலன்கள் குறித்த சிந்தனை, அரசின் கொள்கைகளில் இருப்பதாக அறிய முடிகிறது. சாண எரிவாயு உற்பத்தியுடன், காய்கறிக் கழிவுகள், சமையல் கழிவுகள் போன்றவற்றிலிருந்தும் எரிவாயு உற்பத்தி செய்யும் முயற்சிகளையும் ஒருங்கிணைத்துச் செயல்பட அரசு திட்டமிட வேண்டும்.
குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கொடுப்பதாக அரசு கொள்கை முடிவு எடுக்குமானால் அதில் குறிப்பிடத்தக்க பகுதி வீடுகளுக்கு சிலிண்டர்களுக்கு சமமான எரிவாயுவை இந்த வகையில் உற்பத்தி செய்து தர முடிகிற சாத்தியக்கூறை அரசு ஆராய வேண்டும். இலவசமாக சிலிண்டர் கொடுப்பதால் அரசுக்கு ஏற்பட இருக்கும் கூடுதல் செலவில் குறிப்பிட்ட சதவீதம் குறைவதுடன் நைட்ரஜன் சத்து நிறைந்த இயற்கை உர உற்பத்தியும், கால்நடைப் பெருக்கமும் மாநிலத்தின் வருவாய்ப் பெருக்கத்துக்கு மறைமுகமாக உதவும் காரணிகளாக இருக்கும்.
மக்கள் நலத் திட்டங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால், அதற்கு முதலில் தேவைப்படுவது பொதுமக்களுடைய பங்களிப்பும், ஈடுபாடும். அவை அல்லாது செய்யப்படும் எந்தத் திட்டமும் உரிய பலனை அளிக்காது போவதுடன், அதை அனுபவிப்பவர்களிடம் பொறுப்பின்மையையும் அதிகரிக்கும். அரசின் கஷ்டங்களை உணராத மனநிலைதான் பெருகும்.
பேரரசன் ராஜராஜ சோழன் காலத்தில், "சாவா மூவா பேராடு' அல்லது "சாவா மூவா பெரும் பசு' என்ற திட்டம் சிறப்பாக செயல்பட்டு வந்தது. தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டுகள் உள்பட சோழர் காலக் கல்வெட்டுகளில் இந்தத் திட்டம் குறித்த விவரங்கள் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிராமப்புற தற்சார்பு பொருளாதார மாதிரிகளுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வித்திட்ட மிகச் சிறந்த திட்டம் அது.
கோயில்களில் இரவும்- பகலும் அணையாமல் எரியும் தூண்டாமணி விளக்கு மிகவும் புனிதமாகக் கருதப்பட்ட காலகட்டம் அது. ஒரு விளக்கு ஆண்டு முழுவதும் எரிவதற்கு 96 ஆடுகள் அல்லது 48 மாடுகள் ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் நெய் தேவை என்று கணக்கிடப்பட்டிருந்தது.
கோயில் வருமானத்தின் மூலம் ஆடுகள், மாடுகளை வாங்கி, நிலமற்ற ஏழை விவசாயிகளிடமும், கால்நடை வளர்ப்போரிடமும் வழங்கப்பட்டன. அவற்றைப் பெற்றுக் கொண்ட குடும்பத்தினர் தினமும் குறிப்பிட்ட அளவு நெய்யைக் கோயிலுக்கு அளிக்க வேண்டும். ஆடு, மாடுகளின் மொத்த எண்ணிக்கை எப்போதும் மாறாமல் பராமரிக்க வேண்டும். அந்த எண்ணிக்கைக்கு அதிகமாக பெருகும் ஆடு, மாடுகளை அவர்கள் விற்று, சொந்த வருமானமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
குறிப்பிட்ட காலத்தில், அதே எண்ணிக்கையுள்ள ஆடு, மாடுகளைக் கோயிலுக்கு மீண்டும் அளிக்க வேண்டும். அவை இன்னொரு குடும்பத்துக்கு அரசின் மூலம் வழங்கப்படும். ஆன்மிக கொடையையும், சமூக நலத் திட்டத்தையும் ஒன்றாக இணைத்து, தொலைநோக்குச் சிந்தனையுடன் ராஜராஜ சோழன் செயல்படுத்திய வறுமை ஒழிப்பு மாதிரித் திட்டம் இது.
இதன் அடிப்படையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருக்கிற ஆடுகள், மாடுகள், கோழிகளைக் கொண்டு பல்வேறு ஊர்களிலும் சாண எரிவாயு ஆலைகள் உருவாக்கப்பட்டு அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பை தமிழகம் முழுவதும் பரவலாக இருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் ஒப்படைக்கலாம்.
தமிழ்நாட்டில் தற்போது சுமார் 4.8 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. 50 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் உறுப்பினர்களாகவும், பயனாளிகளாகவும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். மகளிரின் கூர்மதி, ஈடுபாடு ஆகியவை புதிய முயற்சிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டால் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அவர்கள் பெரும் பங்காற்றுவார்கள்.
தமிழகத்தின் கடன் சுமையைக் குறைத்து, வளர்ச்சியும் தடைபடாமல் வருவாயைப் பெருக்கி முன்னேற்றப் பாதையில் தொடர வேண்டும் என்றால் வருவாய்க்கு சாத்தியம் இருக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் தவற விடாது செயல்பட வேண்டும்.
"பதி இழந்தனம், பாலனை இழந்தனம்,
படைத்த
நிதி இழந்தனம், இனி எமக்கு உளது என
நினைக்கும்
கதி இழக்கினும், கட்டுரை இழக்கிலேம்'
என்கிற அரிச்சந்திர புராண சந்திரமதியின் உறுதி இருக்க வேண்டும். அந்த உறுதி மகளிரிடம் அபரிமிதமாக இருக்கும் என்பதை யாவரும் அறிவர்.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதிய சமையல் எரிவாயு சிலிண்டா் புதுச்சேரியில் அறிமுகம்

திருவோணம் அருகே எரிவாயு உருளை வெடித்த விபத்து: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

எரிவாயு உருளை வெடித்த விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

3 நாள்களில் 1.40 கோடி சிலிண்டர் முன்பதிவுகள்: மத்திய அமைச்சகம்
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



