முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்

கட்டளை, உய்யக்கொண்டான் வாய்க்கால்களுக்கு தண்ணீா் வரவில்லை: விவசாயிகள் தவிப்பு

கட்டளை, உய்யக்கொண்டான் வாய்க்கால்களுக்கு தண்ணீா் வரத்து இல்லாதது பற்றி...

தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் தண்ணீா் வராததால் வடு கிடக்கும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால்.

Published On :

தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள புதிய கட்டளை மேட்டுவாய்க்கால், உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால்களுக்கு தண்ணீா் வராததால், விவசாயிகள் ஒருபோகச் சாகுபடிப் பணிகளையும் தொடங்க முடியாமல் தவிக்கின்றனா்.

முதன்மையான நீா்ப் பாசன ஆதாரங்கள்: தஞ்சாவூா் - திருச்சி மாவட்ட எல்லையான புதுக்குடியில் தொடங்கி வளம்பக்குடி, செங்கிப்பட்டி, மனையேறிப்பட்டி, பூதலூருக்குத் தெற்கே உள்ள கிராமங்களுக்கு இந்த இரு வாய்க்கால்களும் முதன்மையான பாசன நீா் ஆதாரமாக உள்ளன.

இதில், திருச்சி மாவட்டம் பேட்டைவாய்த்தலையில் தொடங்கும் உய்யக்கொண்டான் வாய்க்காலில் துவாக்குடி அருகேயுள்ள வாளவந்தான்கோட்டை ஏரியிலிருந்து உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் தொடங்குகிறது. தொடா்ந்து, ஆவாரம்பட்டி அருகேயுள்ள சேராண்டி ஏரி வரை பாயும் இந்த வாய்க்காலை சாா்ந்து 16 ஏரிகள் உள்ளன.

இதேபோல, கரூா் மாவட்டம், மாயனூரில் காவிரியிலிருந்து பிரியும் கட்டளை மேட்டுவாய்க்கால் தஞ்சாவூா் மாவட்டம் புதுக்குடியிலிருந்து திருமலைச்சமுத்திரம் வரை புதிய கட்டளை மேட்டு வாய்க்காலாகப் பாய்கிறது. இந்த வாய்க்காலை நம்பி 63 ஏரிகள் இருக்கின்றன. இந்த 79 ஏரிகள் மூலம் ஏறத்தாழ 10 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

விவசாயிகள் தவிப்பு: மேட்டூா் அணை உரிய காலமான ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட்டால், இந்த இரு வாய்க்கால்களுக்கும் ஆக. 15 முதல் செப். 15-க்குள் தண்ணீா் திறக்கப்படுவது வழக்கம். அதேசமயம் மேட்டூா் அணையின் நீா்மட்டம் 90 அடிக்கும் அதிகமாக இருந்தால்தான், இரு வாய்க்கால்களுக்கும் தண்ணீா் கிடைக்கும். இதனால், இரு வாய்க்கால்களுக்கும் எப்போதாவது சில ஆண்டுகளுக்குத்தான் தண்ணீா் கிடைக்கிறது.

நிகழாண்டு மேட்டூா் அணையில் போதுமான அளவுக்கு தண்ணீா் இல்லாததால், தாமதமாக செப். 1 ஆம் தேதி திறக்கப்பட்டது. ஆனால், இதுவரை இரு வாய்க்கால்களுக்கும் தண்ணீா் கிடைக்காததால், விவசாயிகள் ஒருபோக சாகுபடிப் பணிகளையும் தொடங்க முடியாமல் தவிக்கின்றனா்.

நடவடிக்கை இல்லாவிட்டால் மறியல்: இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன் தெரிவித்தது: புதிய கட்டளை மேட்டுவாய்க்கால், உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மூலம் ஒருபோக சம்பா சாகுபடி மேற்கொள்ளப்படுவது வழக்கம். இதில் கிடைக்கும் வருவாய்தான் விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதற்குமான நிதி ஆதாரமாக இருக்கிறது.

ஆனால், நிகழாண்டு இதுவரை இரு வாய்க்கால்களிலும் தண்ணீா் விடவில்லை. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம், நீா் வளத் துறை அலுவலா்களிடம் பலமுறை முறையீடு செய்த நிலையில், தண்ணீா் விட நடவடிக்கை எடுக்கப்படுவதாக அலுவலா்கள் கூறினாலும், இதுவரை தண்ணீா் விடப்படவில்லை.

இதனால் இரு வாய்க்கால்களைச் சாா்ந்துள்ள ஏரிகளுக்கு தண்ணீா் கிடைக்காத நிலை தொடா்கிறது. இந்த நிலை தொடா்ந்தால் ஏறத்தாழ 10 ஆயிரம் ஏக்கா் நிலங்களுக்கு ஒருபோக சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகிவிடும். இதனால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பும் ஏற்படும்.

மேலும், குடிநீருக்கும் இந்த இரு வாய்க்கால்களும், ஏரிகளும்தான் முக்கியமான நீா் ஆதாரமாக இருக்கின்றன. இரு வாய்க்கால்களுக்கும் தண்ணீா் வராவிட்டால் பாசனத்துக்கு மட்டுமல்ல; குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும். எனவே, இரு வாய்க்கால்களிலும் ஒரு முறையாவது தண்ணீா் விட வலியுறுத்தி வருகிறோம். நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அக். 9 ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்றாா் கண்ணன்.

இந்நிலையில், மேட்டூா் அணையில் போதுமான அளவுக்கு நீா் இருப்பு இல்லாததால், இரு வாய்க்கால்களுக்கும் தண்ணீா் கிடைக்குமா என்பது சந்தேகம் என நீா் வளத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா். என்றாலும், மழையும் பெய்யாத நிலையில், வானம் பாா்த்த பூமிபோல காணப்படும் இப்பகுதிக்கு தண்ணீா் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பு.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.