மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திருச்சி மாநகர்ப் பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகளிலும் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை மாலை காலமானார். இதைத் தொடர்ந்து திமுகவினரும், பொதுமக்களும் தாங்கள் வசிக்கும் பகுதிகளிலேயே கருணாநிதியின் உருவப்படத்தை வைத்து மரியாதை செலுத்தத் தொடங்கினர்.
புதன்கிழமை காலை முதல் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் திமுக சார்பிலும், பொதுமக்களும் மக்கள் நலத்திட்டங்களை தங்களுக்குத் தந்த தலைவருக்கு கண்ணீரை அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருச்சி மாவட்ட திமுக சார்பில் மாநகரின் பல்வேறு இடங்களில் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.
அரைக் கம்பத்தில் தேசியக் கொடி, திமுக கொடி: மறைந்த திமுக தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மத்திய அரசு புதன்கிழமை துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருச்சி விமான நிலையம், தலைமை அஞ்சல் நிலையம், வருமானவரித் துறை அலுவலகம், சுங்கத்துறை அலுவலகக் கட்டம் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்களில் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.
மாநில அரசு ஒருவாரத் துக்கம் அனுசரிக்கும்படும் என்று அறிவித்துள்ளதால், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட மாநில அரசு அலுவலகங்களில் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. மேலும், ஒரு வாரக் காலத்தில் நடத்துவதாக இருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.
திமுக மட்டுமல்லாது பிறகட்சிகளும்: தொடர்ந்து 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட, திமுக கழகத்தின் தலைவராக கடந்த 50 ஆண்டுகளாகச் செயல்பட்ட, தமிழக முதல்வராக 5 முறை இருந்த கருணாநிதியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மாநகரின் பல்வேறு பகுதிகளில் மட்டுமல்லாது, புறநகரின் பல்வேறு பகுதிகளில் திமுகவினரும், பொதுமக்களும் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர்.
மாநகரின் பல்வேறு பகுதிகளில், திமுக சார்பில் மட்டுமல்லாது, மக்கள் நீதி மய்யம், ரஜினிகாந்த் மக்கள் மன்றம் சார்பிலும் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டு அவர்கள் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர். இதுபோல, நடிகர்திலகம் சிவாஜிகணேசன் ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பில் மாநகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதுபோல, ஜீவாநகர்ப் பகுதியிலிருந்து மதுரை சாலை வரை பொதுமக்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் தாரை,தப்பட்டையுடன் ஊர்வலமாக மதுரை சாலைக்கு வந்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்துக்கு மலர்தூவி பொதுமக்கள் மரியாதை செய்தனர். சில பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர்.
தொழிலாளர்கள், வியாபாரிகள்: கருணாநிதி மறைவால் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் திருச்சி காந்தி மார்க்கெட்டில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்த காலையில் கொண்டு வரப்பட்ட பூக்களை ஏலம் மூலமாக விற்பனை செய்த வந்த நிலையில், குறிப்பிடத்தகுந்த அளவில் தொழிலாளர்கள் காந்தி மார்க்கெட் வளாகத்தில் காந்தி சிலை அருகே வைக்கப்பட்டிருந்த கருணாநிதி நினைவஞ்சலி பதாகையில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மாநகரைப் போன்று திருச்சி மாவட்டத்தின் பல்வேறு புறநகர்ப் பகுதிகளிலும் திமுகவினர் மட்டுமல்லாது பல்வேறு வியாபார அமைப்புகள் சார்பில் கருணாநிதியின் உருவப்படம் அல்லது விளம்பரப் பதாகை வைக்கப்பட்டு கட்சியினர், பொதுமக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதுபோல, பல இடங்களில் கருணாநிதியின் புகழ்பாடும் பாடல்கள், சோகப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. திருச்சி மாவட்டம், வயலூரில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒப்பாரி வைத்து திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர்.
மணப்பாறையில்: அனைத்து கட்சிகள் சார்பில் இறுதியாத்திரை ஊர்வலம் நடைபெற்றது.
திருச்சி சாலை காந்தி சிலையில் இருந்து புறப்பட்ட கருணாநிதியின் உருவப்பொம்மை வைக்கப்பட்ட இறுதியாத்திரை ரதம் ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பேருந்து நிலையம் அடைந்தது. பின்னர், அங்கிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு பொத்தமேட்டுபட்டியை ரதம் சென்றடைந்தது. அங்கு கருணாநிதியின் உருவப்பொம்மை மாமுண்டி ஆற்றங்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஊர்வலத்தில், திமுக மற்றும் தோழமை கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதேபோல் வையம்பட்டி, புத்தாநத்தம், துவரங்குறிச்சி மற்றும் வளநாடு ஆகிய பகுதிகளிலும் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
துறையூர்: துறையூரில் திமுக சார்பில் நடைபெற்ற அமைதி பேரணியில் திருச்சி வடக்கு மாவட்ட திமுக பொருளாளர் தர்மன்ராஜேந்திரன், துறையூர் நகர செயலாளர் ந. முரளி உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். பேரணி பாலக்கரையில் தொடங்கி, பெரம்பலூர் சாலை, மார்க்கெட், திருச்சி சாலை வழியாக பேருந்து நிலையத்தை அடைந்தது. துறையூர் அருகே குருவிக்காரன்குளத்தில் திமுக கிளை செயலாளர் தலைமையில் கண்ணன், புஷ்பராஜ் , பெரியசாமி உள்ளிட்டோர் மொட்டையடித்துக் கொண்டனர். பொதுமக்கள் உள்பட திமுகவினர் 50க்கும் மேற்பட்டோர் பேரணியில் பங்கேற்றனர்.
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் பகுதி திமுக சார்பில் ராஜகோபுரம் அருகே கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்கள் மலர் அஞ்சலி செலுத்தினார்கள். மாலை 4 மணியளவில் அடையவளஞ்சான் வீதிகளில் அமைதி ஊர்வலம் சென்றனர். இதில், திமுக மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் க. முரளி, 4 ஆவது வட்ட அவைத் தலைவர் பொன்.பழனிச்சாமி உள்ளிட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இரங்கல் கூட்டம்
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதிக்கு திருச்சியில் பிஎஸ்என்எல் அலுவலர்கள், ஊழியர்கள் சங்கத்தினர் புதன்கிழமை அஞ்சலி செலுத்தும் வகையில் இரங்கல் கூட்டம் நடத்தினர்.
கூட்டத்துக்கு தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் (பிஎஸ்என்எல்) மாநிலச் செயலர் மு. ரவீந்திரன் தலைமை வகித்தார். தொடர்ந்து நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில், திமுக தலைவர் கருணாநிதியின் மக்கள் நலப்பணிகளை எடுத்துக் கூறி பேசினர். தொடர்ந்து அனைவரும் 2 நிமிஷங்கள் மௌனஅஞ்சலி செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வட இந்தியாவில் கொட்டி தீர்த்த கனமழை - புகைப்படங்கள்

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 18 - நேரலை!

இந்தியத் தேர்தல் இயந்திரத்தின் நம்பகத்தன்மை உலகளவில் நிலைநாட்டப்பட்டுள்ளது: வெளியுறவுத் துறை

உ.பி.யில் ஆய்வுக்குச் சென்ற டி.எஸ்.பி. மீது கடும் தாக்குதல்! 24 பேர் கைது!
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |


