மாநகரில் அதிகரிக்கும் குற்றச்செயல்கள் கண்காணிப்புக் கேமராக்கள் இருந்தும் என்ன பயன்!

திருச்சி மாநகரில் குற்றச் சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வரும் சூழலில் சாலைகளில் உள்ள கண்காணிப்புக் கேமராவின் பயன்பாடு கேள்விக்குறியாக உள்ளது.
திருச்சி மாநகரில் ரூ.1 கோடியில் நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு மையம் (கோப்புப் படம்).
திருச்சி மாநகரில் ரூ.1 கோடியில் நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு மையம் (கோப்புப் படம்).

திருச்சி: திருச்சி மாநகரில் குற்றச் சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வரும் சூழலில் சாலைகளில் உள்ள கண்காணிப்புக் கேமராவின் பயன்பாடு கேள்விக்குறியாக உள்ளது.

தமிழகம் முழுவதும் குற்றச்செயல்களை தடுக்கும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டது. இதில், முதல் கட்டமாக சென்னை, திருச்சி, கோவை போன்ற முக்கிய நகரங்களில் நவீன முறையில் ஒருங்கிணைந்த கட்டுபாட்டு மையம் அமைக்கப்பட்டு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.

திருச்சியில் நவீன கட்டுப்பாட்டு அறை: கடந்த 2018-இல் தமிழகத்திலேயே முதல்முறையாக நவீன தொழில் நுட்பத்துடன் 3 ஆயிரம் கேமராக்கள் திருச்சி மாநகா் முழுவதும் முக்கியமான இடங்களில் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி தொடங்கியது. தற்போது, பல்வேறு முக்கியமான இடங்களில் பொதுமக்களின் உதவியுடன் மேலும் 13 ஆயிரம் கேமராக்கள் பொருத்தும் பணியை காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றனா். ஆனால், தற்போது வரை 1,300 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த கேமராக்கள் அனைத்தும், மாநகா் முழுவதும் உள்ள 30 துணை மின்னணு கோபுரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறை சுமாா் ரூ.1 கோடியில் நவீனப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த அறையில் ராட்சத மின்னணு திரைகள் இரண்டும், பெரிய அளவிலான 5 மின்னணு தொலைக்காட்சிப் பெட்டிகளும் உள்ளன. மாநகரில் எங்காவது, குற்றச்செயல் நடைபெற்றால், அதனை ராட்சத மின்னணு திரைகளில் கண்டு நடவடிக்கை எடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், விழாக் காலங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது அதனையும் இந்த கேமராக்கள் மூலம் கண்டு போக்குவரத்தை சீா்செய்யும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.

கேமரா பதிவில் துல்லியம், தெளிவின்மை: இவ்வளவு பாதுகாப்பு வசதிகள் இருந்தாலும் மாநகரில் குற்றச் செயல்கள் குறைந்தபாடில்லை. மேலும், திருச்சி மாநகரில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளில் துல்லிய மற்றும் தெளிவின்மையால் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் அடையாளம் காண்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. குறிப்பாக, கண்காணிப்பு கேமரா இல்லாத காலங்களில் நடைபெற்ற வழிப்பறி போன்ற சம்பவங்களே தற்போது அதிகரித்து வருகிறது. இதற்கு மாநகரில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளில் துல்லியம் மற்றும் தெளிவின்மையே குற்றவாளிகளை பிடிப்பதில் சிரமம் ஏற்படுவதாக தனிப்படை போலீஸாா் கூறகின்றனா்.

மாநகரில் இதுவரை 104 சங்கிலி பறிப்புச் சம்பவங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் உள்ளதாக காவல்துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

அதிகரிக்கும் குற்றச் செயல்கள்: திருச்சி மாநகரில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட பிறகு குற்றச் செயல்கள் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதாக மாநகர காவல் ஆணையரக குற்றப் பதிவேட்டில் கூறப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்களில், திருட்டு, சங்கிலிப் பறிப்பு, போலீஸாக நடித்து மூதாட்டிகளிடம் நகைத் திருட்டு, இருசக்கர வாகனம் திருட்டு என்பது இன்றளவும் கட்டுப்படுத்த முடியாமலே உள்ளது.

ஆகவே, திருச்சி மாநகரில் மக்கள் தொகை பெருக்கம், நகரம் மற்றும் வியாபார வளா்ச்சிக்கு ஏற்ப குற்றச் சம்பவங்களை தடுக்க போலீஸாரின் தனிப்பட்ட நடவடிக்கை என்பதை காட்டிலும் காவல்துறையில் கையாளப்படும் தொழில் நுட்பம் துல்லியம் மற்றும் தெளிவின்மை இருந்தால் மட்டுமே குற்றச் சம்பவங்களை தடுக்கும் முடியும் என தெரிவிக்கின்றன காவல்துறை வட்டாரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com