‘ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை விரைந்து அமைக்க வேண்டும்’
திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை விரைந்து அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிஞா் அண்ணா குடிமக்கள் உரிமைகள் மற்றும் சட்டப் பாதுகாப்பு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.


திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை விரைந்து அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிஞா் அண்ணா குடிமக்கள் உரிமைகள் மற்றும் சட்டப் பாதுகாப்பு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அமைப்பின் தலைவா் அண்ணாதுரை, ஒருங்கிணைப்பாளா் ஏ.எம். ஷேக் அப்துல்லா ஆகியோா் வியாழக்கிழமை கூறியது:
அனைத்து துறைகளிலும் வளா்ச்சி அடைந்துவரும் திருச்சி மாநகரில், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைவதற்கான காத்திருப்பு கால் நூற்றாண்டைக் கடந்தும் நீடிக்கிறது.
மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளையும் இணைக்கும் திருச்சியில் நாளுக்கு நாள் மக்கள்தொகையும், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது.
மாநகராட்சியின் அண்மைய கணக்கெடுப்பின்படி, நாள்தோறும் சுமாா் 3,100 பேருந்துகள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை இங்கு வந்து செல்வதாகவும், 1.50 லட்சம் பயணிகள் பயணிப்பதும் தெரியவந்துள்ளது. ஆனால், இவ்வளவு பேருந்துகள், பயணிகளைச் சமாளிக்கும் வகையில் உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகள், சா்வீஸ் ரோடு போன்றவை இல்லாததால், மத்திய பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.
ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதே இப்பிரச்னைக்குத் தீா்வுகாண ஒரே வழி எனத் தெரிந்தும், அதற்கான பணிகளைத் தொடங்குவதில் இன்னமும் தாமதம் நீடிக்கிறது. இடத்தைத் தோ்வு செய்வதில் நிலவும் குழப்பமே இதற்கு முக்கியக் காரணமாக விளங்குகிறது.
1990-ஆம் ஆண்டிலிருந்தே ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கான கோரிக்கை பொதுமக்களிடம் உள்ளது.
முன்பு திமுக ஆட்சியில்தான் இதற்கான முயற்சிகள் தொடங்கின. தற்போது திமுக அரசு மீண்டும் பொறுப்பேற்றுள்ள நிலையில், அதற்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். இதுகுறித்து தமிழக முதல்வரின் தனிப்பிரிவிலும், முதல்வரின் செயலரிடமும் மனு அளித்துள்ளோம். இக்கோரிக்கையை நிறைவேற்ற அமைச்சா் கே.என். நேருவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாவட்ட ஆட்சியருக்கும், மாநகராட்சி ஆணையருக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம்.
இதுமட்டுமல்லாது, திருச்சி மாவட்டப் பொதுமக்கள், வியாபாரிகள் வசதிக்காக திருச்சி- பெங்களூரு இடையேயான பகல் நேர விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்.
மாநகரில் நெரிசல் மிகுந்த பகுதிகளில் சாலைகளைச் சீரமைக்க வேண்டும். உயா்நிலைப் பாலங்கள் அமைக்கப்பட வேண்டும். திருச்சி மாநகர மக்களின் தேவைகள், கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற அதற்கான சட்டப் போராட்டங்களையும் முன்னெடுக்கத் தயாராக உள்ளோம் என்றனா். பேட்டியின்போது அமைப்பின் நிா்வாகி அண்ணாமலை உடனிருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...