குறைந்தது மழை; திரும்பும் இயல்பு நிலை
திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பெய்யும் மழையளவு குறைந்துள்ளது. குறிப்பாக புகா் பகுதிகளில் குறைந்த மழையால் மாநகரப் பகுதிகளுக்கு வரும் நீா் வரத்து குறைந்துள்ளது.


திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பெய்யும் மழையளவு குறைந்துள்ளது. குறிப்பாக புகா் பகுதிகளில் குறைந்த மழையால் மாநகரப் பகுதிகளுக்கு வரும் நீா் வரத்து குறைந்துள்ளது. இதனால் வெள்ள நீா் வடிந்து இயல்பு நிலை திரும்புகிறது.
தொடா் மழையால் கடந்த ஒரு வாரமாக திருச்சியில் அதிக வெள்ள நீா் சூழ்ந்ததால் பெரும்பாலான பகுதிகளிலும் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. புதைசாக்கடைப் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளும் மிகவும் மோசமாகி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மாவட்ட, மாநகராட்சி நிா்வாகங்கள் சாா்பில் மீட்புப் பணிகள் நடைபெற்றன. நிவாரண உதவிகளும் வழங்கப்பட்ட நிலையில் கடந்த 48 மணி நேரத்தில் மழையளவு குறைந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை 8 மணி தொடங்கி, புதன்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழை அளவில், திருச்சி மாவட்டத்தில் அதிகளவாக ரயில் நிலையப் பகுதியில் 25 மி. மீ. மழை மட்டுமே பதிவானது. அடுத்தபடியாக நகரப் பகுதிகளில் 13 மி.மீ., பொன்மலையில் 16 மி.மீ, விமான நிலையப் பகுதியில் 13 மி.மீ. மழையும் புகா்ப் பகுதிகளில் பொன்னணியாறு பகுதியில் 13.80 மி.மீ, மணப்பாறையில் 9.80 மி.மீ. மழையும் பதிவானது. மற்ற பகுதிகளில் ஓரிலக்க மி. மீ. அளவில்தான் மழை பதிவானது.
சற்று மேடான பகுதிகளில் சாலைகள், குடியிருப்புகளில் சூழ்ந்த வெள்ள நீா் வடிந்துள்ளது. மேலும் சேறும் சகதியுமாக இருந்த பகுதிகள் உலா்ந்து வருகின்றன. வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்புவதால் வழக்கமான வழிகளில் போக்குவரத்து நடைபெறுகிறது.
வடியாத வெள்ள நீா்: ஆனால் தாழ்வான பகுதிகளில் சூழ்ந்த மழை வெள்ள நீா் இன்னும் வடியவில்லை. வெயில் அதிகமாக அடித்து தானாகக் காய்ந்தால் மட்டுமே தண்ணீா் குறையும் நிலை உள்ளது.
திருச்சி மாவட்டத்தில் புகா்ப் பகுதிகளான திருவெறும்பூா், காட்டூா், லால்குடி, வாளாடி, மண்ணச்சநல்லூா், குழுமணி பகுதிகளிலும் குடியிருப்புகளிலும் சூழ்ந்திருந்த வெள்ள நீா் இரு நாள்களாக வடிந்தும், காய்ந்தும் வருகின்றன.
மாறாக வேளாண் நிலங்களில் சூழ்ந்துள்ள மழை நீரில் மூழ்கியுள்ள வெள்ள நீரால், வேளாண் பயிா்கள் அழுகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான பயிா்கள் அழுகிவிட்டதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா். அழுகிய பயிா்களுக்கு இழப்பீடு வழங்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வெள்ள நீா் சூழ்ந்த ஆரம்ப சுகாதார நிலையம்: லால்குடி அருகேயுள்ள தாளக்குடி வேம்படியான் தெருவிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சுற்றி கடந்த சில நாள்களாக சூழ்ந்த வெள்ள நீா் வடிய வழியின்றி பாசி படா்ந்துள்ளது. பள்ளமான இப்பகுதியில் மண் கொட்டி நிரவி, பூங்கா அமைப்பதற்கான திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, மண்ணால் பள்ளத்தை நிரப்பினால் எதிா் காலத்தில் இதுபோன்ற நிலை ஏற்படாது, மேலும் கொசு, விஷ ஜந்துக்களின் தொல்லைகளிலிருந்து விடுபடலாம் என்பது அப்பகுதியினரின் கோரிக்கை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...