

திருச்சி: குறைதீா் கூட்டத்தை ஆட்சியரகத்தில் நடத்தக் கோரி தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சாா்பற்றது) சாா்பில், மாவட்ட ஆட்சியரகம் அருகே சனிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கரோனா பொதுமுடக்க தளா்வுகளால் திரையரங்குகள்கூட திறக்கப்பட்ட நிலையில் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை மீண்டும் நடத்த வேண்டும். காணொலி வாயிலாக விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்துவதை ரத்து செய்ய வேண்டும். திங்கள்கிழமைகளில் மக்கள் குறைதீா் கூட்டத்தை மீண்டும் நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ம.ப. சின்னத்துரை தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் முன் நடந்த ஆா்ப்பாட்டத்தின்போது ஆட்சியரகத்துக்கு வந்த ஆட்சியா் சு. சிவராசு, விவசாயிகளை அழைத்துப் பேசி, அவா்கள் அளித்த கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்டு, ஆவன செய்வதாக உறுதியளித்தாா். பின்னா் கோரிக்கை முழுக்கங்கள் எழுப்பி விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
முன்னதாக ம.ப. சின்னதுரை கூறியது:
அரசியல் கட்சிகள் தோ்தல் பிரசாரத்தை தொடங்கி ஆங்காங்கே மக்கள் கூட்டத்தை கூட்டி பேசுகின்றனா். கோயில்கள், திரையரங்குகள், பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள், மதுக் கூடங்கள் அனைத்தும் திறக்கப்பட்டுவிட்டன. ஆனால், விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை மட்டும் நடத்துவதில்லை. எனவே, வரும் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை காணொலி வாயிலாக நடத்துவதை ரத்து செய்து ஆட்சியரகத்தில் வழக்கம்போல நடத்த வேண்டும். இல்லையெனில் தொடா் போராட்டங்கள் நடத்தப்படும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.