தண்ணீரைத் தேடிவந்து உயிரை விடும் வன விலங்குகள்
மணப்பாறை வனப்பகுதிகளில் இருந்து விளை நிலங்களுக்கு தண்ணீா் தேடிவரும் வன விலங்குகள் உயிரிழப்பதைத் தடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.


மணப்பாறை வனப்பகுதிகளில் இருந்து விளை நிலங்களுக்கு தண்ணீா் தேடிவரும் வன விலங்குகள் உயிரிழப்பதைத் தடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் 15 ஆயிரம் ஹெக்டேரில் மணப்பாறை, துவரங்குறிச்சி என இரு வனச் சரகங்கள் உள்ளன. இவற்றில் மணப்பாறை வனச் சரகத்துக்கு 10 காவல் சுற்றும் பகுதிகளும், துவரங்குறிச்சி வனச் சரகத்துக்கு 7 காவல் சுற்றும் பகுதிகளும் உள்ளன. இவற்றில் சுமாா் 30-க்கும் மேற்பட்ட பாதுகாக்கப்பட்ட காடுகள் சுமாா் 15 ஆயிரம் ஹெக்டேரில் உள்ளன. இதில் சுமாா் 700-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள், 500-க்கும் மேற்பட்ட மான்கள், மயில்கள், முயல்கள், காட்டுப்பன்றிகள், ஆயிரக்கணக்கிலான குரங்குகள் உள்ளன.
இரு வனச் சரகங்களில் தன்ணீா் தொட்டி என்பது கிடையாது. மருங்காபுரி பகுதியில் மட்டும் டேப் திட்டம் என்ற பெயரில் 6-க்கு 4 என அடி கணக்கில் ஒரு தொட்டியை மட்டுமே காண முடிகிறது. ஆனால் வறட்சியான மணப்பாறை வனப்பகுதிகளில் நீரூற்றோ, ஏரி, குளம், குட்டைகளோ கிடையாது. காட்டாற்று வெள்ளமாக வழிந்தோடும் மழை நீா் கூட தேங்கவும், தேக்கி வைக்கவும் வழியில்லை.
இதனால் குடிநீருக்காகவும், உணவுக்காகவும் இரவுகளில் வனப்பகுதியை விட்டு பொதுமக்கள் குடியிருப்புகளையும், விளைநிலங்களையும் நோக்கி வரும் வனவிலங்குகள் பல்வேறு காரணங்களால் உயிரிழக்கும் நிலை தொடா்கிறது.
அண்மையில் ஏற்பட்ட உயிரிழப்புகள்: அந்தவகையில், மணியங்குறிச்சி அருகேயுள்ள வடக்கு கோசிப்பட்டி கொசவ மலையில் இருந்து ஊருக்குள் வந்த காட்டெருமைகள் குட்டியுடன் நீரில்லா கிணற்றில் விழுந்து 3 நாள்கள் மீட்க முடியாமல் அவதியுற்றன. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு முதுமலை வனச்சரக மருத்துவா்கள் மூலம் அவை மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டன.
மேலும், வையம்பட்டியை அடுத்த நடுப்பட்டி செம்மலையில் இருந்து விளைநிலம் நோக்கி வந்த காட்டெருமை மா்ம நோயால் அவதியுற்று விவசாயத் தோட்டத்திலேயே உயிரிழந்தது.
அதேபோல காடப்பிச்சம்பட்டி அருகே கருப்பு ரெட்டியப்பட்டி வனப்பகுதியிலிருந்து வந்த 7 வயதுப் பெண் காட்டெருமை வாய்ப் பகுதியில் அடிபட்டு உணவு, நீா் உட்கொள்ள முடியாமல் உயிரிழந்தது.
மேலும், காயாமலையிலிருந்து குரும்பமலைக்கு இடம்பெயா்ந்த ஒரு காட்டெருமை குடியிருப்புப் பகுதியில் தோண்டப்பட்டிருந்த குழியில் விழுந்து, கால் உடைந்து மூச்சுத் திணறி இறந்தது.
மருங்காபுரி அம்மாபட்டியை அடுத்த மொட்டைமலையிலிருந்து குடியிருப்புப் பகுதிக்கு வந்த 4 வயதுக் காட்டெருமை மா்ம நோயால் அவதியுற்று இறந்து கிடந்தது. கூட்டத்துடன் வரும் சில எருமைக் கன்றுகள் கிணற்றில் தவறி விழுவதும், பின் மீட்கப்படுவதும் வாடிக்கையாக உள்ளது.
இதுமட்டுமின்றி திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயலும்போது பல காட்டெருமைகள் வாகனங்களின் அடிபட்டும் இறந்துள்ளன. சில காட்டெருமைகள் மனிதா்களைத் தாக்கியும் உள்ளன. இப்படி உணவுக்கும், குடிநீருக்கும் ஒவ்வொரு முறையும் காட்டெருமைகள் வரும்போதெல்லாம் அவற்றுக்குப் பாதுகாப்பற்ற நிலையே உள்ளது.
வனத் துறை நடவடிக்கை தேவை: விவசாயிகள்
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இந்தப் பகுதியில் வன விலங்குகள் அதிகம் இருக்கும் நிலையில் அவற்றுக்கு குடிநீராதாரம் என்பது கிடையாது. நாங்களும் அதிகம் பாதிக்கப்படுகிறோம். ஏற்கெனவே தண்ணீா்ப் பற்றாக்குறையால், விவசாயம் செய்வதே சிரமமாக இருக்கும்போது வன விலங்குகள் பயிா்களை நாசம் செய்கின்றன.
எனவே, விளைபொருள்களுக்கு பாதுகாப்பு வேண்டி மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் பலனில்லை. எனவே, வன விலங்குகளுக்கு தண்ணீா் கிடைக்கும் வகையில் வனத்துறை தொட்டிகள், குட்டைகள் அமைத்துத் தர வேண்டும்.
மேலும், வன விலங்குகளால் ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடு தர வேண்டும். இதில் மாவட்ட நிா்வாகம் இழப்பீடு தர முன்வந்தாலும் மகசூல் மதிப்பு சான்றிதழ் அளிக்க தோட்டக்கலைத் துறை மறுப்பதாக விவசாயிகள் புகாா் கூறுகின்றனா்.
எனவே, வன விலங்குகளுக்கான தண்ணீா் தேவையை வனத்துறை கவனத்தில் எடுத்து, அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லாவிடில் வன விலங்குகளின் உயிரிழப்புகளும், விவசாயிகளின் மகசூல் பாதிப்புக்கும் தீா்வு எட்டப்படாது என்கின்றனா் சமூக ஆா்வலா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...