துறையூர் நகர அதிமுக செயலராக அ.பாலமுருகவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள்.
துறையூர் நகர அதிமுக செயலராக அ.பாலமுருகவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள்.

துறையூர் நகர அதிமுக செயலாளராக அ.பாலமுருகவேல்: அதிமுகவினர் கண்டனம்

துறையூர் நகர அதிமுகவின் செயலாளராக 20-வது வார்டு உறுப்பினர் அ.பாலமுருகவேல் நியமிக்கப்பட்டதை எதிர்த்து அதிமுக நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் சிலர் கண்டன முழக்கமிட்டனர். 
Published on

துறையூர்: துறையூர் நகர அதிமுகவின் செயலாளராக 20-வது வார்டு உறுப்பினர் அ.பாலமுருகவேல் நியமிக்கப்பட்டதை எதிர்த்து அதிமுக நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் சிலர் கண்டன முழக்கமிட்டனர். 

அதிமுகவின் துறையூர் நகர செயலாளராக இருந்த டி.ஜெயராமன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறந்தார். இதனால் துறையூர் நகர செயலாளராக அமைதிபாலு என்கிற அ.பாலமுருகவேலை புதன்கிழமை கட்சி தலைமை அறிவித்தது. இவர் 5 முறை நகர்மன்ற வார்டு உறுப்பினராக மக்களால் தேர்வு செய்யப்பட்ட போதிலும், பல்வேறு கட்சிகளுக்கு மாறி சென்று இறுதியாக அதிமுகவில் இணைந்தவர் என்பதால் அவரை நகர செயலாளராக நியமித்திருப்பது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

துறையூர் நகர அதிமுக செயலாளராக நியமிக்கப்பட்ட அ.பாலமுருகவேல்.
துறையூர் நகர அதிமுக செயலாளராக நியமிக்கப்பட்ட அ.பாலமுருகவேல்.

இதையடுத்து வியாழக்கிழமை துறையூர் ஆத்தூர் சாலையில் உள்ள காவல்தாய் அம்மன் கோயிலில் அதிமுக வார்டு செயலாளர்கள் பிரதிநிதிகள் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கட்சிகளுக்கு சென்று விட்டு கடைசியாக அதிமுகவில் இணைந்த அமைதிபாலுவுக்கு அளித்துள்ள நகர செயலாளர் பதவியை திரும்ப பெறாவிடில் கட்சியில் தாங்கள் வகிக்கும் பதவிகளை ராஜினாமா செய்யப் போவதாகவும், நகர செயலாளர் பதவிக்கு விண்ணப்பித்த 13 பேரில் அமைதிபாலுவைத் தவிர மற்ற 12 பேரில் ஒருவரை நகர செயலாளராக நியமித்தால் அவருடன் இணைந்து பணியாற்றுவதாகவும், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரான மு.பரஞ்சோதியை நீக்கி அதிமுகவை அழிவுப் பாதையிலிருந்து காப்பாற்ற வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றினர்.

அதேபோல நகர்மன்ற வார்டு உறுப்பினர்கள் கெளதமி, திவ்யா, சந்திரா, சரோஜா உள்ளிட்டோர் அமைதிபாலுவை துறையூர் நகர செயலாளராக அறிவித்திருப்பதால் தங்களது நகர்மன்ற உறுப்பினர் பதவியை தாங்களே ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக கட்சி தலைமைக்கு கடிதம் எழுதினர்.

அதிருப்தியாளர்கள் அனைவரும் காவல்தாயம்மன் கோயிலுக்கு முன்பு அதிமுக நகர செயலாளர் புதிய நியமனத்தைக் கண்டித்து முழக்கமிட்டனர்.

கட்சி நிர்வாகிகள் நிறைவேற்றிய தீர்மானத்தையும், நகர்மன்ற உறுப்பினர் கடிதத்தையும் கட்சி தலைமைக்கு விரைவில் அனுப்பவும் முடிவு செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com