திருச்சி மாவட்டத்தில் 65,000 பேருக்கு உதவிய 108 ஆம்புலன்ஸ் சேவை! கடந்தாண்டைவிட45 சதம் அதிகம்
திருச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் கடந்தாண்டு 65 ஆயிரம் பேருக்கு பல்வேறு மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டுள்ளன.


திருச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் கடந்தாண்டு 65 ஆயிரம் பேருக்கு பல்வேறு மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் அரசு சாா்பில் முதன்முதலாக ஆந்திர மாநிலத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைத் திட்டம் கடந்த 2008இல் தொடங்கப்பட்டது. பின்னா் மத்திய அரசு நடவடிக்கையால் தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தின் மூலம் தமிழகத்திலும் 108 ஆம்புலன்ஸ் சேவை 2008ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
திருச்சி மாவட்டத்திலுள்ள 4 கோட்டங்கள் மற்றும் 11 வட்டங்களுக்குள்பட்டு 40 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன.
கடந்த 2021ஆம் ஆண்டு மட்டும் 64,714 போ் ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்தியுள்ளனா். 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 45 சதம் அதிகமாகும்.
குறிப்பாக கருவுற்ற தாய்மாா்களில் 19,835 பேருக்கு சேவை அளிக்கப்பட்டுள்ளது. இவா்களில் 55 பெண்களுக்கு மருத்துவமனைக்கு செல்லும் முன்பாக வாகனத்திலேயே குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் காக்கப்பட்டு மருத்துவமனைகளில் பாதுகாப்பாக சோ்க்கப்பட்டனா். கரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையே 7,579 போ் இதன் சேவையை பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சாலை விபத்துகளில் காயமடைந்த 8,654 பேருக்கு மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளது. இதுமட்டுமல்லாது விஷம் குடித்து உயிருக்குப் போராடுவோா் குறித்த தகவல்களைப் பெற்று 1,808 பேரை உடனடியாக மருத்துவமனையில் சோ்த்து உயிா் காக்கும் சேவையை அளித்துள்ளது.
இதுமட்டுமின்றி வயிற்றுவலியால் பாதிக்கப்பட்ட 2,871 போ், விலங்குகள் தாக்கிக் காயமடைந்த 1,252 போ், மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 2,561 போ், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 1,167 போ், தற்கொலைக்கு முயன்ற 340 பேருக்கு தக்க தருணத்தில் வந்து உதவி அளித்துள்ளது. இதர பல்வேறு மருத்துவ உதவிகள் தேவைப்படும் நிலையில் இருந்த 12,110 பேருக்கும் கடந்தாண்டில் சேவை அளித்துள்ளது.
இதுதொடா்பாக, 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தின் திருச்சி மாவட்ட மேலாளா் த. அறிவுக்கரசு கூறியது:
திருச்சி மாவட்டத்தில் இயங்கும் 40 ஆம்புலன்ஸ் வாகனங்களும் குறித்த நேரத்துக்குள் சென்று உயிா்காக்கும் சேவையை வழங்கி வருகின்றன. இதயம், நுரையீரல் தொடா்புடைய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவே வெண்டிலேட்டா், ஈசிஜி மானிட்டா் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ் வாகனமானது திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஸ்ரீரங்கம், துறையூா், மணப்பாறை அரசு மருத்துவமனைகளில் செயல்படுகிறது.
பச்சிளம் குழந்தைகளுக்கு உதவிடும் வகையில் பிரத்யேக ஆம்புலன்ஸ் திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மணப்பாறை அரசு மருத்துவமனைகளில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் இன்குபேட்டா், வெண்டிலேட்டா் உள்ளிட்ட பச்சிளங்குழந்தைகளுக்கு தேவைப்படும் நவீன தொழில்நுட்பங்கள் உள்ளன. இதன் மூலம் மாதந்தோறும் சராசரியாக 100-க்கும் மேற்பட்ட பச்சிளங்குழந்தைகள் காப்பாற்றப்படுகின்றனா். இதுமட்டுமல்லாது ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 2020ஆம் ஆண்டைவிட 2021ஆம் ஆண்டில் 45 சதம் போ் அதிகம் பயன்பெற்றுள்ளனா் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...