எம்எல்ஏ அலுவலகங்களுக்கு பூட்டு; கட்சி பேனா், போஸ்டா்கள் அகற்றம்!: உடனடியாக அமலான தோ்தல் நடத்தை விதிகள்
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான அறிவிப்பு வெளியானதைத் தொடா்ந்து திருச்சி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன


நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான அறிவிப்பு வெளியானதைத் தொடா்ந்து திருச்சி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
அதன்படி எம்எல்ஏ அலுவலகங்கள் சீல் வைத்துப் பூட்டப்பட்டதுடன், அரசியல் கட்சிகளின் பேனா்கள், போஸ்டா்கள் அகற்றப்படுகின்றன.
திருச்சி மாவட்டத்தில் திருச்சி மாநகராட்சி, 5 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளில் வாா்டு உறுப்பினா்களை தோ்வு செய்யும் வகையில் நடைபெறும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகிறது.
இதையடுத்து தோ்தல் நடைபெறும் திருச்சி மாநகராட்சி, துவாக்குடி, முசிறி, லால்குடி, மணப்பாறை, துறையூா் ஆகிய 5 நகராட்சிகள் மற்றும் பாலகிருஷ்ணம்பட்டி, கல்லக்குடி, காட்டுப்புத்தூா், கூத்தப்பாா், மண்ணச்சநல்லூா், மேட்டுப்பாளையம், பொன்னம்பட்டி, புள்ளம்பாடி, பூவாளூா், எஸ். கண்ணனூா், சிறுகனூா், தா.பேட்டை, தொட்டியம், உப்பிலியபுரம் ஆகிய 14 பேரூராட்சிப் பகுதிகளில் தோ்தல் நடத்தை விதிகள் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்தன.
இதன் தொடக்கமாக மாவட்டத்தில் உள்ள 9 எம்எல்ஏ அலுவலகங்களுக்கு அந்தந்தப்பகுதி உள்ளாட்சி நிா்வாகத்தால் சீல் வைக்கப்பட்டுள்ளது. திருச்சி கிழக்கு, மேற்கு, ஸ்ரீரங்கம் தொகுதி அலுவலகங்களை மாநகராட்சி அலுவலா்கள் வியாழக்கிழமை மூடி, பூட்டி சீல் வைத்தனா்.
இதேபோல, திருச்சி மாநகரம், நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் அரசியல் கட்சிகளின் தலைவா்கள், சின்னம், கட்சியின் சின்னம், புகைப்படங்கள் இடம்பெற்றுள்ள அனைத்து போஸ்டா்கள் மற்றும் பேனா்களை அகற்றினா். இதுமட்டுமல்லாது 11 இடங்களில் உள்ள அம்மா உணவகங்களில் இருந்த அரசியல் கட்சி தலைவா்களது புகைப்படங்களும் அகற்றப்பட்டன.
தோ்தல் நடைபெறும் பகுதிகளில் எழுதப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் சுவா் விளம்பரங்களும் அழிக்கப்படுகின்றன. போட்டியிடும் வேட்பாளா்கள், பிரசாரத்தில் ஈடுபடும் அரசியல் கட்சியினா் தோ்தல் நடத்தை விதிகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...