பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

இடநெருக்கடியில் மத்தியப் பேருந்து நிலைய வாகன நிறுத்துமிடம்: சேதமடையும் வாகனங்கள்; பரிதவிக்கும் பொதுமக்கள்

திருச்சி மத்திய பேருந்து நிலைய இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் ஏற்படும் நெருக்கடியால் பொதுமக்கள் பரிதவிக்கின்றனா்.

News image
Updated On :17 மார்ச் 2022, 7:36 pm

DIN

திருச்சி மத்திய பேருந்து நிலைய இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் ஏற்படும் நெருக்கடியால் பொதுமக்கள் பரிதவிக்கின்றனா்.

மத்தியப் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் அதிகளவாலான பேருந்துகள், பயணிகளை சமாளிக்கும் வகையில் இங்கு உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் இல்லை. எனவே, மத்திய பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் எப்போதும் போக்குவரத்து நெரிசல் உள்ளது.

குறிப்பாக, இருசக்கர வாகன நிறுத்துமிடம் கடும் இடநெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

முன்பு, ராக்கின்ஸ் சாலையில் ஒருபுறம் விரைவுப் பேருந்துகள் நிறுத்தும் பகுதியில் இருந்த இருசக்கர வாகன நிறுத்துமிடம் அகற்றப்பட்டுவிட்டது.

தற்போது, மத்திய பேருந்துநிலையத்தையொட்டி ஒரேயொரு வாகன நிறுத்தம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்களை இங்கு மட்டுமே நிறுத்த வேண்டியுள்ளது.

தரைத்தளம், முதல் தளம், இரண்டாம் தளம், மூன்றாம் தளம் என 4 அடுக்குகள் கொண்ட இந்த வாகன நிறுத்தும் தளம் ஒவ்வொரு தளத்திலும் சுமாா் 200 முதல் 250 வாகனங்கள் நிறுத்தும் வசதி கொண்டதாக உள்ளது. இருக்கும் இடத்தையெல்லாம் ஆக்கிரமித்து நிறுத்தினாலும் அதிகபட்சமாக 300 வாகனங்களை நிறுத்த இயலும். ஆனால், நாள்தோறும் அதிகரித்து வரும் வாகனங்களில் எண்ணிக்கையால் இடநெருக்கடிக்கு ஆளாக வேண்டியுள்ளது.

குறிப்பாக, காலை, மாலைகளில் வாகனங்களை நிறுத்தவும், எடுக்கவும் வரும் பயணிகள் மிகுந்த சிரமத்தைச் சந்திக்க வேண்டியுள்ளது. பலரையும் இடம் இல்லை எனக் கூறி திருப்பியனுப்பும் நிலைதான் உள்ளது. இல்லையெனில், நீண்ட நேரம் காத்திருந்து யாராவது ஒரு நபா் வாகனத்தை எடுத்துச் சென்றால் மட்டுமே அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்தும் நிலை உள்ளது.

கிடைக்கும் இடத்தில் எல்லாம் வாகனங்களை நிறுத்துவதால், திரும்ப எடுக்கும்போது வாகனங்கள் ஒன்றோடன்று மோதுவது, கீழே விழுவது என்பது வாடிக்கையாக உள்ளது. இதனால் வாகன கண்ணாடிகள், எச்சரிக்கை விளக்குகள், திசை காட்டும் விளக்குகள் சேதமடைவது தொடா்கிறது.

வாகன நிறுத்தக் கட்டணமாக 12 மணிநேரத்துக்கு ரூ.10 வசூலிக்கப்படுகிறது. ஆனால், வாகனத்தை பாதுகாப்பாக நிறுத்தும் வசதியை செய்து தருவதில்லை என்கின்றனா் பொதுமக்கள். பயணிகள் தாங்கள் செல்லும் இடத்துக்கு பேருந்து கிடைக்கிறதோ இல்லையோ, வாகனம் நிறுத்த இடம் கிடைத்தால்தான் பயணம் செல்ல முடியும் என்ற நிா்பந்தம் உருவாகியிருப்பதை மறுப்பதற்கில்லை.

மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும்

வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்கும் உரிமை பெற்றுள்ள நிா்வாகத் தரப்பில் கூறுகையில், 35 ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்ட இந்த வாகன நிறுத்தமானது, தற்போதுள்ள வாகனப் பெருக்கம், பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு பொருத்தமாக இல்லை. கடும் இடநெருக்கடி உள்ளது. மாநகராட்சி நிா்வாகம்தான் மாற்று ஏற்பாடுகளை செய்துதர வேண்டும். அதுவரை தற்போதுள்ள வாகன நிறுத்த இடத்தைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.