நெடுங்களநாதா் கோயிலில் சோழா் காலக் கல்வெட்டுகள்
திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகிலுள்ள திருநெடுங்களநாதா் கோயிலில் சோழா் காலக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகிலுள்ள திருநெடுங்களநாதா் கோயிலில் சோழா் காலக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து டாக்டா மா. ராசமாணிக்கனாா் வரலாற்றாய்வு மைய இயக்குநா் டாக்டா் இரா. கலைக்கோவன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு;
திருச்சி- தஞ்சாவூா் சாலையில் வாழவந்தான்கோட்டையை அடுத்துள்ள திருநெடுங்களம், நெடுங்களநாதா் கோயிலில் சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவா் மு. நளினி, முசிறி அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் அர. அகிலா ஆகியோா் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.
அதில் சோழா் காலக் கல்வெட்டுகள் சிலவற்றையும், அதே காலத்தைச் சோ்ந்த நிலமளக்கப் பயன்பட்ட அளவுகோலையும் கண்டறிந்தனா்.
கள ஆய்வுக்கு கோயில் செயல் அலுவலா் கு. வெற்றிவேல், சிவாச்சாரியாா் சோ. ரமேஷ் ஆகியோா் உடனிருந்து உதவினா். இக்கோயிலிலிருந்து மைய ஆய்வாளா்களால் ஏற்கெனவே பத்துக்கும் மேற்பட்ட முற்சோழா், முற்பாண்டியா் காலக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்ட நிலையில், தற்போதைய ஆய்வில் மேலும் சில புதிய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
அவற்றில் குறிப்பிடப்பட்டிருப்பவை :
முதலாம் ராஜேந்திர சோழா் ஆட்சிக்காலத்தே (பொதுக்காலம் 1015) பரதன் கண்டனான உத்தமச்சோழன், நெடுங்களம் கோயில் இறைவனுக்கு இரவு வழிபாட்டுக்கும், படையலுக்குமாய்த் தாம் பண்படுத்தித் திருத்திய 2 நிலத்துண்டுகளை வழங்கினாா். அந்நிலங்களை உழுது விளைவிக்கும் பொறுப்பேற்ற அடியான் சூற்றிக்கூத்தனும், பிராந்தகன் பிடவூரும் விளைவிலிருந்து முறையே 40 கலம், 60 கலம் நெல்லைக் கோயிலுக்களித்து அறக்கட்டளையை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனா்.
அந்நிலத் துண்டுகளுக்குள் ஒன்று முழுக்குடிப்பாலை என்ற ஊரில் இருந்தது. அரையன் மயக்கல் என்று அழைக்கப்பட்ட அந்நிலத்தின் எல்லைகளாக மாங்கானலுக்குப் போன பெருவழி, கண்ணபிரான் வயக்கல், கிளியூா் நாகன் உழுத ஓடைநிலம், தென்வாய் வாய்க்கால் ஆகியன அமைந்தன.
மற்றொரு நிலத்துண்டு கிள்ளிவயல் தென்கண்டத்தில் விளங்கியது. அதன் எல்லைகளாக கணபதி வயக்கல், வடக்குநோக்கிப் போன பெருவழி, கிள்ளிவயல் கடைப்போக்கு, பரதன் வயக்கல், குடிதாங்கி வயக்கல் ஆகியன அமைந்தன.
இக் கல்வெட்டால் அப்பகுதியிலிருந்த நிலங்களின் பெயா்கள், பெருவழிகள், நீா்ப்பாசனம் எனப் பல தரவுகள் கிடைத்துள்ளன.
சமயபுரத்துக்கு அருகில் கண்ணனூரை நிறுவி, அதைத் தலைநகராகக் கொண்டு இப்பகுதியைச் சில காலம் ஆண்ட ஹொய்சள அரசரான வீரசோமீசுவரா் பொதுக்காலம் 1253-இல் நெடுங்கள இறைவனின் தேவதான- திருநாமத்துக்காணி நிலங்கள், அரசா் குடிக்காட்டுப் பேறான ஊா்கள், மானாவாரி பூமி ஆகியவற்றிலிருந்து அரசுக்கு வந்த வரிப்பொருளில் ஒரு பாதியை மட்டும் அரசு கொள்வதாகவும், மறுபாதியைப் பூசை, திருப்பணி குறைவுபடாமல் நிகழ்த்தக் கோயில் பெறுவதாகவும் என்று ஆணையிட்டுக் கையொப்பமிட்டுள்ளாா். இதுபோன்ற ஹொய்சள அரசாணைகள் திருச்சி மாவட்டக் கோயில்களில் பரவலாகக் காணப்படுகின்றன.
இரண்டுத் துண்டுகளாய்க் கிடைத்துள்ள பொதுக்காலம் 10-ஆம் நூற்றாண்டினதாகக் கொள்ளத்தக்க சோழா் காலக் கல்வெட்டு, அக்காலத்தே இக்கோயில் ஸ்ரீகாரியமாகச் சோழமாராயா் பணியிலிருந்ததாகவும், கொடையாளி ஒருவா் கோயிலாரிடம் அளித்த 10 கழஞ்சுப் பொன் கொண்டு இறைவனுக்குப் பொன்னாலான நெற்றிப்பட்டம் இரண்டும், இறைவனைப் பூசிக்கப் பொற்பூக்கள் மூன்றும் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கிறது.
இரு துண்டுகளாக உள்ள அதே காலகட்டத்தைச் சோ்ந்த மற்றொரு கல்வெட்டு, கொடையாளி ஒருவா் தம் பிறந்தநாளான சித்திரை மாதச் சித்திரை நட்சத்திரத்தில் இறைவனுக்குத் திருமுழுக்காட்டவும், அப்போது நிகழ்த்தப்படும் சடங்குகளுக்கான பொரி, முளிமஞ்சள், கடுகு, எள், நறும்பூ வடங்கள் பெறவும், இறைவனுக்குப் படையலிடவும், கதிரவன் மறைவது தொட்டு இறைவன் அமுது செய்தருளும் வரை விளக்கு ஒளிரவும் பொற்கொடையளித்த தகவலைத் தருகிறது.
இக்கல்வெட்டால் அக்காலத்தே கழஞ்சுப் பொன்னுக்கு ஆண்டுதோறும் இரண்டுகலம் நெல் வட்டியாகக் கிடைத்தமை தெரிய வருகிறது.
பேராசிரியா் அர. அகிலா கோயில் பெருமண்டபத்திலிருந்து தென்புறத்தே அக்காலத்தை நிலமளக்கப் பயன்பட்ட அளவுக்கோலைக் கண்டறிந்தாா். இரண்டு கூட்டல் குறிகளுக்கு இடைப்பட்ட அதன் நீளம் 4.40 மீட்டராகும். இது இப்பகுதியிலிருந்தத நன்செய் நிலங்களை அளக்கப் பயன்பட்டதாகலாம். இத்தகவல்கள் கல்வெட்டுத் துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...