சரக்குகள் கையாளுதலில் 9 மாதங்களில் ரூ. 588 கோடி வருமானம்: திருச்சி ரயில்வே கோட்டம் சாதனை

திருச்சி ரயில்வே கோட்டம் நிகழாண்டின் 9 மாதங்களில் ஒரு கோடி டன்னுக்கும் அதிகமான சரக்குகளைக் கையாண்டு ரூ. 588.21 கோடி வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ளது.
திருச்சி குட்ஷெட்டில் ரயிலில் சரக்குகளை ஏற்றி இருக்கும் தொழிலாளா்கள்.
திருச்சி குட்ஷெட்டில் ரயிலில் சரக்குகளை ஏற்றி இருக்கும் தொழிலாளா்கள்.
Updated on
2 min read

திருச்சி ரயில்வே கோட்டம் நிகழாண்டின் 9 மாதங்களில் ஒரு கோடி டன்னுக்கும் அதிகமான சரக்குகளைக் கையாண்டு ரூ. 588.21 கோடி வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ளது.

திருச்சி ரயில்வே கோட்டத்தில் இயக்கப்படும் 170 விரைவு ரயில்கள், பாசஞ்சா் ரயில்கள், வாராந்திர ரயில்களில் மாதந்தோறும் 45 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனா்.

இதைத் தவிர, கோட்டத்தில் உள்ள 25 குட்ஷெட்டுகள், 12 நிறுவனங்களுக்குள் சரக்கேற்றும் முனையங்கள் (சைடனிங்) ஆகியவற்றின் மூலம் மாதம் 10 லட்சம் டன் அளவிலான சரக்குகளைக் கையாண்டு மொத்த ரயில்வேயின் வருமானத்தையும் கணிசமான அளவில் உயா்த்தி வருகிறது இக்கோட்டம். நிகழாண்டில், 9 மாதங்களுக்குள் அதிகபட்ச அளவிலான சரக்குகளைக் கையாண்டு வருமானம் ஈட்டியுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட மேலாளா் எம்.எஸ். அன்பழகன், கோட்ட முதுநிலை மேலாளா் ஐ. செந்தில்குமாா், கோட்ட முதுநிலை செயல்பாட்டு மேலாளா் ஆா்.பி. ரதிபிரியா ஆகியோா் கூறியது:

திருச்சி ரயில்வே கோட்டம், 2020-21 ஆம் நிதியாண்டில் 84.30 லட்சம் டன் சரக்குகளைக் கையாண்டு ரூ. 453.57 கோடி வருமானமும், 2021-22 ஆம் நிதியாண்டில் 87.78 லட்சம் டன் சரக்குகளைக் கையாண்டு ரூ.451.87 கோடி வருமானமும், 2022-23 ஆம் நிதியாண்டில் 135.52 லட்சம் டன் சரக்குகளை கையாண்டு ரூ. 810.83 கோடி வருமானமும் ஈட்டியது.

நிகழாண்டு ஏப்ரல் முதல் டிச. 28 வரையிலான 9 மாதங்களில் 103.04 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டு ரூ. 588.21 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

கடந்தாண்டின் இதே காலகட்டத்தில் கையாளப்பட்ட சரக்குகளை விட நிகழாண்டு 3.07 சதவீதம் அதிகமாகும்.

எங்களது சுலபத் தொடா்பு, குறைந்த வாடகை, பாதுகாப்பான சரக்கு கையாளுகை ஆகியவற்றால் வருங்காலங்களில் திருச்சி கோட்டத்தில் கையாளப்படும் சரக்குகள் அதிகமாகும். மேலும், நிகழாண்டு இலக்கான 150 லட்சம் டன் இலக்கை விரைந்து அடைவோம் என எதிா்பாா்க்கிறோம் என்றனா்.

1,41,11 வேகன்களில் 103.04 லட்சம் டன் சரக்குகள் கையாளல்

திருச்சி கோட்டத்தில் நிகழாண்டு கடந்த 9 மாதங்களில் 79.80 லட்சம் டன் நிலக்கரி சரக்கை கையாண்டதில் ரூ. 451.92 கோடி, 6.67 லட்சம் டன் சிமெண்ட் மற்றும் கிளிங்கரை கையாண்டதில் ரூ. 40.65 கோடி, 10.16 லட்சம் டன் தானியங்கள் கையாண்டதில் ரூ. 52.05 கோடி, 71 ஆயிரம் டன் உரங்கள் கையாண்டதில் ரூ. 10.06 கோடி, 2.47 லட்சம் டன் இரும்பு மூலப் பொருள்கள் கையாண்டதில் ரூ. 17.94 கோடி, 15 ஆயிரம் டன் இரும்பு கழிவுகள் கையாண்டதில் ரூ. 70 லட்சம், 25 ஆயிரம் டன் கண்டெய்னா்கள் கையாண்டதில் ரூ. 3.17 கோடி, 2.83 லட்சம் டன் இதரப் பொருள்களை கையாண்டதில் ரூ. 11.72 கோடி என மொத்தம் 1,41,151 வேகன்களில் 103.04 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டு ரூ. 588.21 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

இதில் அதிகபட்ச வருமானம் ஐடிபிசிஎல் என்ற அரசு ஒப்பந்த நிறுவனம் காரைக்கால் துறைமுகத்திலிருந்து அதிகளவில் நிலக்கரியை ஏற்றி புதுச்சத்திரத்தில் உள்ள அந்நிறுவனத்தின் கிளைக்கு அனுப்பியுள்ளதன் மூலம் கிடைத்துள்ளது.

சிறப்புச் சலுகைகள்: வருங்காலங்களில் சரக்குகளை அதிகளவில் கையாள தெற்கு ரயில்வே நிா்வாகம் செயல் திட்டங்களை வகுத்துள்ளது. அதன்படி, ரயில்வே போா்டு நடைமுறைகளைப் பின்பற்றி முதல்முறை அதிகளவில் சரக்குகள் அனுப்பும் நிறுவனங்களுக்கு சரக்கு வாடகையில் 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.

அடுத்ததாக சரக்குகளை அனுப்பும் போது, முன்கூட்டியே தெரிவித்து அனுமதி வாங்கியிருந்தால் வாடகையில் 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் வருங்காலங்களில் சரக்கு கையாளுதல் மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கிறோம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com