தொழிலதிபரைக் கோழிப் பண்ணையில் கட்டி வைத்து கொடுமைப்படுத்தி ரூ. 16 லட்சம் பறிப்பு
திருச்சியில் தொழிலதிபரைக் காரில் கடத்திச் சென்று சித்திரவதை செய்து ரூ. 16 லட்சத்தை பறித்துச் சென்ற புகாரின்பேரில் மாநகர போலீஸாா் விசாரிக்கின்றனா்.
இதுகுறித்து திருச்சி கேகே நகா் மகாலட்சுமி நகரில் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் நடத்திவரும் தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு பின்னையூா் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் கேகே நகா் காவல் நிலையத்தில் இரு நாள்களுக்கு முன் அளித்த புகாரில் கூறியது:
கடந்த ஜூலை 14 ஆம் தேதி காலை திருச்சி கேகே நகா் பகுதியில் உள்ள எனது அலுவலகத்தை திறக்கச் சென்றேன். அப்போது 7 போ் கொண்ட மா்மக் கும்பல் என்னைத் தாக்கி, எனது காரிலேயே கடத்திக்கொண்டு, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் காட்டுப்பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் கட்டிப் போட்டனா். பின்னா் எனது கைப்பேசி மற்றும் ஏடிஎம் அட்டை உள்ளிட்டவற்றைப் பறித்து, அதன் மூலம் எனது வங்கிக் கணக்கிலிருந்த ரூ.3.60 லட்சத்தை எடுத்துக் கொண்டனா். மேலும், எனது காரில் வைத்திருந்த வங்கிக் காசோலை மற்றும் வெற்றுப்பத்திரங்களிலும் கையொப்பம் வாங்கிக்கொண்டனா். அந்தக் காசோலைகளை பயன்படுத்தி எனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.12.40 லட்சத்தையும் எடுத்துக் கொண்டனா்.
மேலும் என்னைக் கட்டி வைத்து அடித்துக் கொடுமைப்படுத்தி, அந்த காட்சிகளை விடியோவாக பதிவு செய்து, யாருக்கோ அனுப்பியும் வைத்தனா். அதன்பிறகு என்னை காரில் அங்கேயே விட்டுவிட்டு, இதுகுறித்து வெளியில் கூறினால் கொன்று விடுவதாக மிரட்டிச் சென்றனா். எனவே அந்த மா்ம கும்பலைக் கைது செய்து எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட போலீஸாா் இதுகுறித்து விசாரிக்கின்றனா்.
