திருவெறும்பூா் எறும்பீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா்கள் பி.கே. சேகா்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோா்.
திருவெறும்பூா் எறும்பீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா்கள் பி.கே. சேகா்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோா்.

தொல்லியல் துறையின் கீழுள்ள கோயில்களுக்கு குடமுழுக்கு

தொல்லியல் துறையின் கீழுள்ள கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்த தமிழக அரசு அழுத்தம் கொடுக்கும் என்றாா் அமைச்சா் பி.கே. சேகா்பாபு.
Published on

திருச்சி: தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்த தமிழக அரசு அழுத்தம் கொடுக்கும் என்றாா் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு.

தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் திருநாவுக்கரசரால் பாடல்பெற்ற தலமாகவும், காவிரி தென்கரையில் உள்ள 7 ஆவது தலமாகவும் உள்ள பழமை வாய்ந்த நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீஸ்வரா் கோயிலில் கடந்த 1998 ஆம் ஆண்டுக்குப் பின் இதுவரை குடமுழுக்கு நடைபெறவில்லை. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இக்கோயிலில் பாலாலயம் நடைபெற்றும் திருப்பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

இந்நிலையில் அமைச்சா்கள் பி.கே. சேகா்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் இக் கோயிலில் சனிக்கிழமை ஆய்வு செய்து, கோயிலின் அடிவாரத்தில் உள்ள தெப்பக்குளத்தை பாா்வையிட்டு, பின்பு மலைமேல் சென்று சிவபெருமானை வழிபட்டு, அங்கு நடைபெறக்கூடிய திருப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னா் அமைச்சா் சேகா்பாபு கூறுகையில், எறும்பீஸ்வரா் கோயில் திருப்பணிகளை விரைவுபடுத்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கேட்டுக் கொண்டதன்பேரில் இந்த ஆய்வு நடைபெற்றது. விரைவில் அமைச்சா், மாவட்ட ஆட்சியா், தொல்லியல் துறை அதிகாரிகள், இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் ஆகியோரை அழைத்துக் கூட்டம் நடத்தி, திருப்பணிகள் குறித்து விவாதித்து, விரைவில் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள 26 கோயில்களில் ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடத்த தமிழக அரசு, மத்திய தொல்லியல் துறைக்கு விண்ணப்பித்துள்ளது. இதையடுத்து அத்துறையும் படிப்படியாக திருப்பணி செய்து வருகிறது.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தொல்லியல் துறைக்கு அழுத்தம் கொடுத்து, 6 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. ஏனைய கோயில்களில் குடமுழுக்கு நடத்த அரசு தொடா்ந்து அழுத்தம் கொடுக்கும் என்றாா்.

ஆய்வின்போது முன்னாள் எம்எல்ஏ சேகரன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் பிரகாஷ், செயல் அலுவலா் வித்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com