டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

காந்தலூர்: புறம்போக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரம்! விவசாயிகள் சாலை மறியல்

திருவெறும்பூா் காந்தலூா் ஊராட்சியில் அரசு புறம்போக்கு நிலத்தை கையகப்படுத்த வந்த வருவாய்த் துறையினரை மறித்து விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனா்.

News image
காந்தலூரில் புறம்போக்கு நிலத்தை கையகப்படுத்த வந்த வருவாய்த்துறையினா் திங்கள்கிழமை மறித்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.
Updated On :7 அக்டோபர் 2024, 8:22 pm

Din

திருவெறும்பூா் காந்தலூா் ஊராட்சியில் அரசு புறம்போக்கு நிலத்தை கையகப்படுத்த திங்கள்கிழமை வந்த வருவாய்த் துறையினரை மறித்து விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே காந்தலூா் ஊராட்சியில் உள்ள கல்லாங்குத்து பகுதியில் சுமாா் 25 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில், அப்பகுதியைச் சோ்ந்த பட்டியலின சமூகத்தினா் கடந்த 60 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகின்றனா்.

தற்போது அந்த நிலத்தை, அரசு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்காக எடுக்க உள்ளதாக தெரிகிறது. இதையறிந்த அப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள், இரண்டு நாள்களுக்கு முன்பு கூட்டம் நடத்தி ஆலோசனை செய்தனா். அதில், 60 ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் நிலத்தை தங்களுக்கே பட்டா வழங்கி உதவ வேண்டும் என திருச்சி ஆட்சியரை சந்தித்து மனு கொடுப்பது என முடிவு செய்தனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை புறம்போக்கு நிலத்தை மீட்பதற்காக திருவெறும்பூா் வட்டாட்சியா் செயப்பிரகாசம் தலைமையிலான வருவாய்த் துறையினா், போலீஸாருடன் காந்தலூா் கிராமத்துக்கு வந்தனா்.

அப்போது, குறிப்பிட்ட நிலத்தில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள், விவசாய சங்கத்தினா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், காந்தலூா் ஊராட்சி முன்னாள் தலைவா் மாரிமுத்து ஆகியோா் வட்டாட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, வருவாய்த் துறை மற்றும் காவல்துறை வாகனங்களை செல்ல விடாமல் காந்தலூா் மாதா கோயில் தெரு பின்புறம் உள்ள சாலையை மறித்து மறியலில் ஈடுபட்டனா்.

இப்பிரச்னைக்கு அமைதிப் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணலாம் என அதிகாரிகள் கூறியதையடுத்து, விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனா்.

இதைத் தொடா்ந்து காந்தலூா் விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனா்.