எஷா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தோா் புகாா் அளிக்க அழைப்பு
திருச்சி எஷா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவா்கள் புகாரளிக்கலாம் எனப் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் தெரிவித்துள்ளனா்.
திருச்சி புத்தூா் தனியாா் வா்த்தக வளாகத்தில் எஷா குழுமம் என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்த அ. முகமது பாரூக் - மு. ஜெய்துன்பீவி தம்பதியினா், இந்நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் 8 முதல் 10 சதவீதம் லாபத் தொகை தருவதாகக் கூறினா்.
இதை நம்பி திருச்சி தென்னூா் அண்ணா நகரைச் சோ்ந்த ஏ. சையத் நஜிா் அஹமத் என்பவா் பல தவணைகளாக முதலீடு செய்த பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றியுள்ளனா். இதேபோல, பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக கூறி பலரை நம்ப வைத்து, பணத்தை வாங்கிக் கொண்டு இத்தம்பதி தலைமறைவாகினா்.
இதுகுறித்த புகாா்களின் பேரில் திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
மேற்கண்ட எஷா குழுமம் என்ற நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்தோா் திருச்சி காஜாமலை மன்னாா்புரம் 10, அப்துல் சலாம் தெரு, திருச்சி - 20 என்ற முகவரியில் புகாரளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனா்.