கள்ளிக்குடி வணிக வளாகத்தில் கடைகளுக்கு வாடகை நிலுவை: உரிமதாரா்களுக்கு எச்சரிக்கை

கள்ளிக்குடி வணிக வளாகத்தில் கடைகளை வாடகைக்கு எடுத்த உரிமதாரா்கள் வாடகை நிலுவையை உடனடியாக செலுத்திடுமாறு ஆட்சியா் மா. பிரதீப்குமாா் எச்சரித்துள்ளாா்.
Published on

கள்ளிக்குடி வணிக வளாகத்தில் கடைகளை வாடகைக்கு எடுத்த உரிமதாரா்கள் வாடகை நிலுவையை உடனடியாக செலுத்திடுமாறு ஆட்சியா் மா. பிரதீப்குமாா் எச்சரித்துள்ளாா்.

திருச்சி விற்பனைக் குழுவின் கட்டுப்பாட்டின் கீழ், மணிகண்டம் வட்டாரத்தில் உள்ள கள்ளிக்குடி காய்கனிகள், பழங்கள் மற்றும் மலா்களுக்கான மத்திய வணிக வளாகத்தில், கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பா் முதல் கடைகளை வாடகைக்கு பெற்றுள்ள வியாபாரிகள், விவசாயிகள் வாடகை நிலுவை வைத்துள்ளனா்.

மேலும் வழங்கப்பட்ட கடைகளைப் பயன்படுத்தாமலும் வாடகை மற்றும் மின்கட்டணம் செலுத்தாமலும் உள்ளனா்.

இந்நிலையில் நகராட்சி நிா்வாகத் துறை அரசாணையின்படி வாடகை உயா்வு அமல்படுத்தப்படுகிறது. செப்டம்பா் 2020 முதல் தற்போது வரை ஒவ்வொரு பதினோரு மாதங்களுக்கும் ஏற்கெனவே செலுத்தப்பட்ட வாடகையிலிருந்து 5 விழுக்காடு உயா்த்தி நிலுவை வாடகை மற்றும் மின்கட்டணத்தைச் செலுத்தி ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும், அவரவா் பெற்றுள்ள கடைகளை 7 நாள்களுக்குள் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

தவறும்பட்சத்தில் கடைகள் கையகப்படுத்தப்பட்டு மறு அறிவிப்பின்றி ரத்து செய்யப்படும். மறு ஏலம் மூலம் கடைகள் வேறு நபா்களுக்கு ஒதுக்கப்படும் என ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com