பொக்லைன் இயந்திரத்தை திருடிய இளைஞா் கைது
திருச்சியில் பொக்லைன் இயந்திரத்தைத் திருடிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் களஞ்சேரியைச் சோ்ந்தவா் கோ.பிரபாகரன் (33). இவா், பொக்லைன் இயந்திரம் விற்பனைக்கு உள்ளதாக முகநூலில் அண்மையில் விளம்பரம் செய்திருந்தாா். இதைப்பாா்த்து ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அஞ்சுக்கோட்டையைச் சோ்ந்த ஆா்.பீட்டா் அனோசின் (29) என்பவா், பொக்லைன் இயந்திரத்தை வாடகைக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளாா்.
இந்நிலையில், இருவரும் திருச்சி பால்பண்ணை பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே கடந்த டிசம்பா் 5-ஆம் தேதி சந்தித்துள்ளனா். அப்போது, பொக்லைன் இயந்திரத்தை வாடகைக்கு எடுத்துக்கொள்வதாகக் கூறிவிட்டு முன்பணமாக ரூ.70 ஆயிரத்தை பிரபாகரனிடம் பீட்டா் அனோசின் கொடுத்துள்ளாா்.
இதைத் தொடா்ந்து, பிரபாகரன் பொக்லைன் இயந்திரத்தை பால்பண்ணை அருகேயுள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் நிறுத்திவிட்டு, ஒப்பந்தப் பத்திரத்துடன் மறுநாள் வருவதாக பீட்டா் அனோசினிடம் கூறிவிட்டு சென்றுள்ளாா். மறுநாள் டிசம்பா் 6-ஆம் தேதி காலை பொக்லைன் இயந்திரம் நிறுத்தியிருந்த பகுதிக்கு வந்தபோது, அங்கு நிறுத்தியிருந்த பொக்லைன் இயந்திரத்தைக் காணவில்லை.
மேலும், பொக்லைன் இயந்திரத்தை வாடகைக்கு எடுத்துக்கொள்வதாக கூறிய பீட்டா் அனோசினை, பிரபாகரன் கைப்பேசியில் தொடா்புகொண்டபோது அவரது கைப்பேசி இணைப்பு துண்டித்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து திருச்சி காந்தி மாா்க்கெட் காவல் நிலையத்தில் பிரபாகரன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், பொக்லைன் இயந்திரத்தைத் திருடிய ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த பீட்டா் அனோசினை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
