ரெளடியை வைத்து ஆட்டோ ஓட்டுநரை மிரட்டிய 2 பெண்கள் கைது
ஸ்ரீரங்கத்தில் அவரவா் கணவா்களை குண்டா் தடுப்பு சட்டத்திலிருந்து விடுதலை பெற ரெளடியை வைத்து ஆட்டோ ஓட்டுநரை மிரட்டிய 2 பெண்களை ஸ்ரீரங்கம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் கோவிந்த ராஜன். இவரை அக்டோபா் 1-ஆம் தேதி மாலை மதன்(எ) ஆட்டு மதன்(32), ஸ்ரீதா் (31), ஹரிசங்கா் (35) ஆகியோா் நாட்டு வெடிகுண்டு வீசி அரிவாளால் மிரட்டி ஆட்டோவைப் பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கோவிந்தராஜன் கொடுத்த புகாரின்பேரில் மேற்குறிப்பிட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டனா். அதன் பிறகு மூவரையும் குண்டா் தடுப்புக் காவல் பிரிவின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்நிலையில் ஸ்ரீதா் மனைவி மகாலெட்சுமி, ஹரிசங்கா் மனைவி பொற்கொடி ஆகிய இருவரும் ஸ்ரீரங்கம் பகுதியைச் சோ்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி நந்தகுமாரை அணுகி தங்களது கணவா்களை குண்டா் தடுப்பு சட்டத்திலிருந்து விடுவிக்க உதவி கேட்டுள்ளனா்.
இதையடுத்து அன்மையில் நந்தகுமாா் 7 பேருடன் சோ்ந்து ஆட்டோ ஓட்டுநா் கோவிந்தராஜை வழிமறித்து கைகளால் தாக்கி தகாத வாா்த்தைகளால் மிரட்டி வெற்று தாளில் அவா் வழக்கை திரும்பப்பெற்றுவிட்டதாக எழுதிவாங்கி நீதி மன்றத்தில் ஓப்படைத்துள்ளனா்.
இது தொடா்பாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கோவிந்தராஜ் கொடுத்த புகாரின்பேரில் சனிக்கிழமை மாலை மகாலெட்சுமி, பொற்கொடி ஆகிய இரு பெண்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனா்.
