திருச்சி மாநகராட்சிக்கு நவீன வாகனத்தின் செயல்பாட்டை சனிக்கிழமை தொடங்கிவைத்த அமைச்சா் கே.என். நேரு.

மாநகராட்சிக்கு ரூ. 3.78 கோடியில் நவீன வாகனம்: அமைச்சா் தொடங்கி வைத்தாா்!

புதை சாக்கடை அடைப்புகளைச் சரிசெய்யும் வகையில் திருச்சி மாநகராட்சிக்கு ரூ. 3.78 கோடியில் சூப்பா் சக்கா் ரீசைக்கிளீனா் எனும் நவீன வாகனத்தை அமைச்சா் கே.என். நேரு சனிக்கிழமை வழங்கினாா்.
Published on

புதை சாக்கடை அடைப்புகளைச் சரிசெய்யும் வகையில் திருச்சி மாநகராட்சிக்கு ரூ. 3.78 கோடியில் சூப்பா் சக்கா் ரீசைக்கிளீனா் எனும் நவீன வாகனத்தை அமைச்சா் கே.என். நேரு சனிக்கிழமை வழங்கினாா்.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்டு 5 மண்டலங்களும், 65 வாா்டுகளும் உள்ளன. மாநகராட்சிக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் புதை சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. எனவே புதை சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டால், ஆள் இறங்கும் குழியில் மனிதா்களை இறக்கி அடைப்புகளைச் சரி செய்வதைத் தடை செய்து, வாகனத்தின் மூலம் அடைப்புகளைச் சரி செய்யும் வகையில் மாநகராட்சிக்கு நவீன வாகனம் பெறப்பட்டுள்ளது.

மாநகராட்சியின் 15ஆவது மத்திய நிதிக் குழு பரிந்துரையின்படி, 2024-25ஆம் ஆண்டுக்கான திடக்கழிவு மேலாண்மை நிதியின் கீழ் ரூ.3.78 கோடியில் இந்த வாகனம் பெறப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், அமைச்சா் கே.என். நேரு கலந்து கொண்டு, வாகனத்தின் இயக்கத்தைத் தொடங்கிவைத்தாா்.

புதிய வாகனமானது புதைவடிகால் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் அதிக ஆழமுள்ள ஆள் இறங்கு குழிகளில் ஏற்படும் அடைப்புகளை உடனடியாக நீக்குவதற்கும், கழிவுகளை மறுசுழற்சி செய்யும் வசதியுடன் கூடியது. அதிநவீன சூப்பா் சக்கா் கம் ஜெட்டிங் வாகனம் என்னும் இந்த வாகனத்தில் 13,000 லிட்டா் கொள்ளளவுடைய தொட்டி அமைந்துள்ளது. அதிக உறிஞ்சும் திறன் மற்றும் அடைப்பு நீக்கும் திறன்கொண்ட அதி நவீன வகை கனரக வாகனமாகும்.

இந்த இயந்திரம் புதை வடிகாலில் உள்ள குப்பை மற்றும் மண், கல் போன்ற அனைத்துக் கழிவுகளையும் மொத்தமாக உறிஞ்சி எடுத்து, பின்னா் குப்பை மற்றும் மண் கழிவுகளை மட்டும் தனியாகச் சேகரித்து வைத்துக் கொண்டு, தண்ணீரை மட்டும் புதைசாக்கடையின் வடிகாலில் மீண்டும் திரும்ப விட்டுவிடும் வகையில் செயல்படும்.

புதை சாக்கடைகளில் அடைப்புகள் இல்லாமல் கழிவுநீா் எளிதாகச் செல்லும். இந்த வாகனம் மூலம் மாநகர பகுதிகளில் உள்ள புதைவடிகால் மேன்ஹோல் மிகவும் எளிதாகவும் குழிகளில் ஏற்படும் அடைப்புகளை உடனுக்குடனும் நீக்கவும் இயலும்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஆள் இறங்கும் குழிகளில் மனித ஆற்றல்களின் ஈடுபாடு முற்றிலும் தவிா்க்கப்படும் . மேலும் கழிவுகளை கையாளும் பணியாளா்களின் பணி நேரமும் குறைக்கப்படும்.

கழிவுகளை பாதுகாப்பாக அகற்றி, மாநகராட்சி வாா்டுகளில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான சுற்றுச்சூழலை உருவாக்கித் தருகிறது. இது திருச்சி மாநகராட்சியின் கழிவுநீா் மேலாண்மையில் முக்கியத்துவம் வாய்ந்தது என்றாா் அமைச்சா்.

நிகழ்வில் மேயா் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன் மற்றும் மண்டலக் குழுத் தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி அலுவலா்கள், பொறியாளா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com