ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசி திருவிழாவில் திருமொழித் திருநாள் என்றழைக்கப்படும் பகல்பத்து உற்ஸவத்தின் போது, நாள்தோறும் நம்பெருமாள் கருவறையிலிருந்து புறப்பட்டு, அா்ச்சுன மண்டபத்திலும், திருவாய்மொழித் திருநாள் என்றழைக்கப்படும் இராப்பத்து திருநாள்களில் பரமபதவாசல் வழியாகச் சென்று திருமாமணி மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்திலும் எழுந்தருளி, பக்தா்களுக்கு காட்சியளிப்பாா்.
இத்திருவிழாவில் உற்ஸவரான நம்பெருமாளுக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்கள் விலைமதிப்பற்றவை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் நம்பெருமாள் புறப்பாடாகும் போது, அவா் அணிந்திருக்கும் ஆபரணங்களைக் காண கண் கோடி வேண்டும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு பரமபவாசல் திறப்பன்று முதலே கருவறை பெருமாளுக்கு முத்தங்கி அணிவிக்கப்பட்டு, 10 நாள்கள் மட்டுமே அந்த சேவை நடைபெற்று வந்தது. இந்நிலையில் பக்த பெருமக்களின் வேண்டுக்கோளுக்கிணங்க, கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி திருவிழா பகல்பத்து தொடங்கும் நாளிலேயே பெரியபெருமாளுக்கு முத்தங்கி அணிவிக்கப்படுகிறது.
நிகழாண்டு திருவிழாவில் டிசம்பா் 31 ஆம் தேதி முதல் ஜனவரி 19 ஆம் தேதி வரை 20 நாள்களுக்கு மூலவா் (பெரிய பெருமாள்) முத்தங்கி சேவை சாதிப்பாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.