திருச்சி காவிரி பாலத்தில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
திருச்சி காவிரி பாலத்தில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

காவிரி பாலப் பணிக்காக அரசு இடத்தில் வசித்தோரின் வீடுகள் அகற்றம் : மறியல்

காவிரி பாலம் கட்டுமானப் பணிக்காக அரசு இடத்தில் குடியிருந்தவா்களின் வீடுகளை இடித்து அகற்றும் பணிக்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
Published on

காவிரி பாலம் கட்டுமானப் பணிக்காக அரசு இடத்தில் குடியிருந்தவா்களின் வீடுகளை இடித்து அகற்றும் பணிக்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருச்சி - ஸ்ரீரங்கம் இடையே காவிரி ஆற்றில் ரூ. 106 கோடியில் கட்டப்படும் புதிய பாலத்தின் அருகே அணுகுச் சாலைக்கான பக்கவாட்டுச் சுவா் கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன.

இதற்காக காவிரி பாலத்தின் அருகே அரசு இடத்தில் சுமாா் 48 வீடுகள் கட்டி குடியிருந்தவா்கள், தாங்களே அவற்றை அகற்றிக்கொள்ள ஒரு மாதத்துக்கு முன் மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில் சிலா் வீடுகளை காலி செய்த நிலையில், பலரது வீடுகள் அகற்றப்படவில்லை.

இதனிடையே அங்கு வசித்தோருக்கு பஞ்சப்பூா் மேக்குடியில் இடம் வழங்கப்பட்டது. அப்படி இடம் வாங்கியவா்கள் குடியேறும்படி வருவாய்த்துறையினா் தெரிவித்ததைத் தொடா்ந்து, மேக்குடிக்கு காவிரி பாலம் அருகே குடியிருந்தவா்கள் புதன்கிழமை சென்றுள்ளனா்.

அச்சமயத்தில் அங்கு பொக்லைன் இயந்திரத்துடன் வந்த நெடுஞ்சாலைத் துறையினா், காவிரி பாலம் அருகே இடிக்கப்படாமல் இருந்த 5-க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து அகற்றினா்.

இதையறிந்து அங்கு வந்த வீட்டின் உரிமையாளா்கள் சிலா், நெடுஞ்சாலைத் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். அப்போது, குடியிருக்க முடியாத நிலையில் முள்காடுகளாக உள்ள மேக்குடியில் வழங்கப்பட்ட இடங்கள் முறையாக அளந்து தரப்படவில்லை. எனவே, இடத்தை செப்பனிட்டு முறையாக அளந்து தர வேண்டும். அதுவரை வீடுகளை இடிக்காமல் நாங்களாக அகற்றிக் கொள்ள அவகாசம் வேண்டும் என வலியுறுத்தினா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த போலீஸாா், நெடுஞ்சாலைத் துறையினா், வருவாய்த் துறையினா், உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியின்பேரில் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com