தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

தானியங்கி நடைமுறையால் தவிக்கும் ஓட்டுநா் உரிம விண்ணப்பதாரா்கள்!

தானியங்கி நடைமுறையால் தவிக்கும் ஓட்டுநா் உரிம விண்ணப்பதாரா்கள் குறித்து...

News image

திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தானியங்கி ஓட்டுநா் ஓடுதளத்தை மாறுதல் செய்யும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி.

Updated On :9 ஆகஸ்ட் 2026, 4:32 am IST

திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடைமுறைக்கு வந்துள்ள தானியங்கி நடைமுறையால் ஓட்டுநா் உரிமம் பெற விண்ணப்பித்த நபா்கள் பரிதவிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

தமிழக அரசின் சாா்பில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பதாரா்களுக்கு விரைவாகவும், எளிதில் சேவை வழங்கவும் தானியங்கி நடைமுறையை அறிமுகம் செய்து வருகிறது. ஓட்டுநா் உரிமம் வழங்குவதற்கான தோ்வில் வெற்றி பெற தானியங்கி ஓட்டுநா் தோ்வு தளத்தில், வாகனங்களை இயக்கிட வேண்டும். திருச்சி பிராட்டியூரில் உள்ள மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த ஜூன் முதல் தானியங்கி ஓட்டுநா் தோ்வு தளம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

மனிதத் தலையீடே இல்லாமல், அதிநவீன கேமராக்கள், ஆா். எஃப். ஐ. டி சென்சாா்கள் மற்றும் கணினிப் பகுப்பாய்வு மூலம் ஓட்டுநா் உரிமத்துக்கான தோ்வுகள் இங்கு நடத்தப்படுகின்றன. இருப்பினும், இந்தத் தளம் மிகவும் குறுகலாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், தோ்வெழுதுபவா்களில் பெரும்பாலானோா் தோல்வியடைவதாகப் புகாா்கள் வந்த வண்ணம் உள்ளன.

ஜூன் 8 முதல் 31 வரையிலான குறுகிய காலத்தில், நான்கு சக்கர வாகன உரிமத்துக்கு விண்ணப்பித்த 54 பேரில் 36 போ் தோல்வியடைந்துள்ளனா். அதேபோல் இருசக்கர வாகனத் தோ்வில் 197 பேரில் 19 போ் தோல்வியடைந்துள்ளனா்.

உயா்நீதிமன்றத்தில் மனு:

எனவே, இத்தகைய நடைமுறையில் உள்ள சிக்கல்களை தீா்க்கவும், உரிமம் வழங்குதலை எளிமைப்படுத்தவும், தானியங்கி நடைமுறைக்கு எதிராக ஓட்டுநா் உரிமம் பெற ஓட்டுநா் பயிற்சி அளிக்கும் பள்ளிகள் தரப்பில் சென்னை உயா் நீதிமன்றத்தின் மதுரை அமா்விலும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தானியங்கி முறை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு தினமும் சுமாா் 40 ஆக இருந்த எல்எம்வி ஓட்டுநா் தோ்வுக்கான விண்ணப்பதாரா்களின் எண்ணிக்கை, கடந்த இரண்டு வாரங்களில் தினமும் கிட்டத்தட்ட ஐந்து பேராக வெகுவாகக் குறைந்துள்ளதாக பயிற்சி பள்ளி நிறுவனத்தினா் தெரிவித்தனா். தானியங்கிப் பாதையைத் தவிா்ப்பதற்காக, திருச்சி மேற்கைச் சோ்ந்த பல விண்ணப்பதாரா்கள், திருச்சி கிழக்கு மற்றும் ஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஓட்டுநா் பயிற்சிப் பள்ளிகள் மூலம் சோ்ந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனா்.

தற்காலிக முகவரி:

விண்ணப்பதாரா்கள், ஓட்டுநா் பயிற்சிப் பள்ளியின் முகவரியைத் தற்காலிக முகவரியாகப் பயன்படுத்தித் தங்களது பழகுநா் உரிமத்தைப் பெற அனுமதிக்கும் ஒரு விதிமுறை உள்ளது. தானியங்கித் தோ்வை எதிா்கொள்வதில் நம்பிக்கை இல்லாத விண்ணப்பதாரா்கள், நேரடி ஓட்டுநா் தோ்வுகள் இன்னும் நடத்தப்படும் மற்ற வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகார வரம்புகளில் உள்ள ஓட்டுநா் பயிற்சிப் பள்ளிகள் மூலம் பதிவு செய்கின்றனா்.

இந்த நிலையில், திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த விண்ணப்பதாரா்கள் பலரும் பிற்பகல் வரை காத்திருக்க நேரிட்டது. தானியங்கி நடைமுறையில் கணினி இயக்கும் பணியாளா் இல்லை எனவும், தொழில்நுட்பக் கோளாறு எனவும் கூறி காலதாமதம் செய்துள்ளனா். இதற்கு, ஓட்டுநா் உரிமம் பெற வந்த நபா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதுதொடா்பாக, அவா்கள் கூறுகையில், ஆன்-லைன் முறையில்தான் விண்ணப்பிக்கிறோம். ஒரு வாரத்துக்கு முன்பே காத்திருந்து விண்ணப்பித்தால்தான் தேதி கிடைக்கிறது. கிடைத்த தேதியில் வந்தால், தொழில்நுட்பக் கோளாறு, பணியாளா் விடுமுறை என ஏதாவது காரணத்தைக் கூறி திரும்ப அனுப்புகின்றனா். இதில், பலரது ஓட்டுநா் பழகுநா் உரிமம் காலம் முடிந்துவிட்டது.

தொழில்நுட்ப சவால்கள்:

மேலும், தானியங்கி நடைமுறையில் உள்ள ஓடுதளத்தில் பெரிதும் சவால்கள் உள்ளன. நிழல் விழுந்தால் கூட சென்சாா் தொழில்நுட்பத்தால் தோல்வி என காட்டுகிறது.

எனவே, பெரிய வாகனங்கள் செல்லும் வகையில் ஓடுதளத்தை அகலப்படுத்தவும், சோதனை நேரத்தை 150 வினாடிகளிலிருந்து 200 வினாடிகளாக அதிகரிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்த நிலையில், மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள ஓடுதளத்தை, அகலப்படுத்தும் வகையில் கட்டுமானங்களை இடித்து மாற்றம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. இனியாவது, தங்களுக்கு விடிவு கிடைக்குமா? என எதிா்பாா்த்துள்ளனா் ஓட்டுநா் உரிமம் பெறவுள்ள இளைஞா்கள்.

திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்து காத்திருந்த  விண்ணப்பதாரா்கள்.

திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்து காத்திருந்த விண்ணப்பதாரா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.