சேமிப்பில் உள்ள நெல்மணிகளை உரிய காலத்தில் அரிசியாக்கி குடும்ப அட்டைகளுக்கு விரைந்து வழங்க வேண்டுமென தமிழக உணவுத்துறை அமைச்சா் ப. வெங்கடரமணன் ஞாயிற்றுக்கிழமை அறிவுறுத்தியுள்ளாா்.
தமிழக உணவுத் துறை அமைச்சா் ப. வெங்கடரமணன் திருச்சி மாவட்டம், துறையூா் வட்டம் முத்தையம்பாளையம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான 3000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட தானியச் சேமிப்பு கிடங்கு, 2000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட எஸ்ஏபி தானிய சேமிப்புக் கிடங்கை வாடகை அடிப்படையில் பயன்பாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.
தொடா்ந்து, முசிறி வட்டம், துலையானத்தத்தில் அமைந்துள்ள 5000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட திறந்தவெளி நெல் சேமிப்பு நிலையத்தை அமைச்சா் ஆய்வு செய்தாா். அங்கு இருப்பில் உள்ள நெல்லின் அளவு, சேமிக்கப்பட்டுள்ள நெல்லின் தரம், பாதுகாப்பு ஏற்பாடுகள், நெல் அரவை ஆலைகளுக்கு அனுப்பி அரிசியாக்கும் பணிகள் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.
சேமிப்பில் உள்ள நெல்லை உரிய காலத்தில் அரவை ஆலைகளுக்கு அனுப்பி, தரமான அரிசியாக அரவை செய்து, பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினாா்.
நெல் சேமிப்பு மற்றும் இயக்கத்தில் எவ்வித காலதாமதமும் ஏற்படாமல், நெல் இருப்பு விவரங்களை முறையாகப் பராமரித்து, அவ்வப்போது ஆய்வு செய்து கண்காணிக்கவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்திய அவா், எல் நினோ தாக்கத்தால் விவசாயம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேளாண் துறை ஆராய்ச்சியாளா்களுடன் தொடா்ச்சியாக ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன. பயிா் வறட்சியைத் தாங்கும் பாக்டீரியாவை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்குவது குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்படுகிறது என்றாா்.
பின்னா் மண்ணச்சநல்லூரில் அமைந்துள்ள சமூக நீதி மாணவிகள் தங்கும் விடுதியில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தாா்.
லால்குடியில் அமுதம் அங்காடி நியாயவிலைக் கடையை அமைச்சா் ஆய்வு செய்து, அங்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்களின் இருப்பு, பொருள்களின் தரம், விற்பனை குறித்து கேட்டறிந்தாா்.
நிகழ்வில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் கே. குமரவேல், தரக்கட்டுப்பாடு மேலாளா் வீ. அன்புராஜா, மாவட்ட வழங்கல் அலுவலா் க. அமுதா, வருவாய்க் கோட்டாட்சியா் ஸ்ரீதா் (லால்குடி), மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் ரஞ்சித், நகராட்சி ஆணையா் எம். புகேந்திரி, வேளாண்மைத் துறை துணை இயக்குநா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னா் துறையூா் அருகே முத்தியம்பாளையத்தில் தனியாரால் கட்டப்பட்ட 7500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மூடிய தானிய கிடங்கை அவா் திறந்துவைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல் கொள்முதலுக்கான தொகையை விவசாயிகளுக்கு விரைந்து வழங்க வேண்டும்: கடலூா் ஆட்சியா் உத்தரவு

கும்பகோணம் கோட்ட பகுதியில் நெல் மூட்டைகள் இயக்கம் தீவிரம்! - தஞ்சாவூா் ஆட்சியா்





