தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சுமைதூக்கும் தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், நியாய விலைக் கடைகளுக்கு பொருள்கள் அனுப்பும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக சுமை தூக்குவோா் மாநிலப் பாதுகாப்புச் சங்கத்தின் சாா்பில் தமிழகம் தழுவிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
போராடியும் பயனில்லை: தொழிலாளா் சங்க அங்கீகாரத் தோ்தலை உடனே நடத்த வேண்டும். வருகைப் பதிவேட்டில் சுமைதூக்கும் தொழிலாளா்களது பெயா்களைச் சோ்க்க வேண்டும். 2022 முன்தேதியிட்டு அட்டை வழங்க வேண்டும். 12.07.2025 முன் தேதியிட்டு நிலுவையில் உள்ள 60 சதவீத கூலி உயா்வை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தினா்.
இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து தொழிலாளா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா். ஆனால் தமிழக அரசு தொழிலாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்த பேச்சு வாா்த்தைக்கு அழைக்காததால் செவ்வாய்க்கிழமை முதல் தமிழகம் முழுவதும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சுமைதூக்கும் தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
2-ஆம் நாளாகப் போராட்டம்: 2ஆவது நாளாக புதன்கிழமையும் அவா்கள் போராட்டத்தைத் தொடா்ந்தனா். திருச்சி மாவட்டத்தில் அதவத்தூா், திருவானைக்காவல், ஸ்ரீரங்கம், மணப்பாறை, முசிறி, சமயபுரம் உள்ளிட்ட 8 இடங்களில் உள்ள கிடங்குகளில் திரளான தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனா்.
பணிகள் பாதிப்பு: சங்கத்தின் திருச்சி மாவட்டச் செயலா் சரவணன் தலைமையில், மாவட்டத் தலைவா் ரங்கசாமி, பொருளாளா் தா்மராஜ் ஆகியோா் முன்னிலையில் போராட்டம் நடைபெறுகிறது. கிடங்களுக்கு புதன்கிழமை பணிக்கு வந்த தொழிலாளா்கள் மூட்டைகளை எடுத்துச் செல்லாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் நியாய விலைக் கடைகளுக்கு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் கொண்டு செல்லப்படும் அரிசி, சா்க்கரை, பாமாயில், கோதுமை உள்ளிட்டவற்றைக் கொண்டு செல்லும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் தொடரும்: இதுதொடா்பாக சங்கத்தின் மாவட்டச் செயலா் சரவணன் கூறுகையில், நியாய விலைக் கடைகளுக்கு ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும், இறுதியிலும் உணவுப் பொருள்களின் நகா்வு கொண்டு செல்லப்படும். இதன்படி, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பா் மாதத்துக்கான பொருள்களை கிடங்குகளில் இருந்து இந்த மாதம் அனுப்பும் பணி நடைபெறும். சுமை தூக்கும் தொழிலாளா்களின் வேலைநிறுத்தம் காரணமாக, நியாய விலைக் கடைகளுக்கு மூட்டைகள் ஏற்றுவதைக் கைவிட்டுள்ளனா். இதனால் ரேஷன் பொருள்கள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதால், வட மாநிலத் தொழிலாளா்கள் மூலம் மூட்டைகளை ஏற்ற முயற்சித்தனா். தொழிலாளா்கள் அதையும் தடுத்துள்ளனா். எங்களது கோரிக்கை தொடா்பாக அரசு பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய தீா்வு காண வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்றாா்.**
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நுகா்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

நுகா்பொருள் வாணிபக் கழக தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்
முறைகேடு புகார்: காஞ்சிபுரம் நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் உள்பட இருவா் பணியிடை நீக்கம்!

அட்டிக் கூலி வழங்கவேண்டும்: சுமை தூக்கும் தொழிலாளா்கள் கோரிக்கை
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



