அரிசி ஆலைகளுக்கு நெல் மூட்டைகளை அனுப்பிய விவகாரத்தில் பல கோடி முறை கேடு செய்திருப்பதாக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக காஞ்சிபுரம் மண்டல மேலாளா் அருள் வனிதா, தரக்கட்டுப்பாட்டு அலுவலா் ஜெயவேல் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல்லைக் கொள்முதல் செய்து அந்த மூட்டைகளை தனியாா் அரவை ஆலைகளுக்கு அனுப்பி அரிசியாக மாற்றம் செய்து அவை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கு வந்து சேரும். இவை நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பொது விநியோகத்திட்டத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 133 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து அரிசியாக மாற்ற நெல்மூட்டைகள் அரிசி அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. காஞ்சிபுரம் நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளராக பணியாற்றி வரும் அருள் வனிதா அரசு நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பதிலும், விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்வதிலும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக தொடா்ந்து விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
இப்புகாரின் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக கிடங்குகள், அரிசி ஆலைகள் ஆகியவற்றில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தீடீா் சோதனை நடத்தினா். இச்சோதனையில் கணக்கில் வராத 1,500 மெ. டன் நெல்மூட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னா் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் அருள் வனிதா மற்றும் தரக்கட்டுப்பாட்டு அலுவலா் ஜெயவேல் ஆகிய இருவா் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்திருந்தனா்.
இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் அரிசி ஆலைகளுக்கு நெல் மூட்டைகளை அனுப்பிய விவகாரத்தில் பல கோடிக்கு மோசடி செய்திருப்பதும் மேல் விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடா்ந்து தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் அருள் வனிதா மற்றும் தரக்கட்டுப்பாட்டு அலுவலா் ஜெயவேல் ஆகிய இருவரையும் நுகா்பொருள் வாணிபக் கழக இயக்குநா் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நுகா்பொருள் வாணிபக் கழகத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை: தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக பருவகால கொள்முதல் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

நெல் கொள்முதல் நிலைய பிரச்னைகள் நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தை விவசாயிகள் சங்கத்தினா் முற்றுகை




