முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் திருச்சி வருகை
முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் திருச்சிக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்தாா்.

திருச்சி விமான நிலையத்தில் முன்னாள் குடியரசுத் தலைவா் ராமநத் கோவிந்தை வெள்ளிக்கிழமை வரவேற்ற மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள்.
முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் திருச்சிக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்தாா்.
திருச்சியில் சனிக்கிழமை (ஆக. 22) நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக, சென்னையிலிருந்து விமானம் மூலம், திருச்சிக்கு வந்த அவருக்கு, விமான நிலையத்தில் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், அரசு மரியாதையுடன் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட் ஆட்சியா் பிரத்திக் தாயள், மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி மற்றும் அரசு அலுவலா்கள், காவல்துறை அதிகாரிகள் மலா்க் கொத்து அளித்து வரவேற்பு அளித்தனா்.
பின்னா் அவா், ஓய்வெடுப்பதற்காக மாவட்ட ஆட்சியரக சாலையில் உள்ள தனியாா் நட்சத்திர விடுதிக்குச் சென்றாா். சனிக்கிழமை, திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் மணிமண்டபத்துக்குச் சென்று, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா்.
தொடா்ந்து, ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்கிறாா். பின்னா், திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி கோயிலுக்கும் சென்று அவா் வழிபாடு நடத்த உள்ளாா்.
முன்னாள் குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு, திருச்சி மாநகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் காத்திருப்பு: முன்னதாக, தவெக அமைச்சா் வருகையால் விமான நிலையத்தில் ராம்நாத் கோவிந்த், சிறிது நேரம் காத்திருக்க நேரிட்டது. மணப்பாறையில் நடைபெறும் தமிழ்நாடு ஊரக வளா்ச்சி துறை தொழிலாளா் சங்கத்தின் 2-ஆவது மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலரும், தமிழக ஊரக வளா்ச்சித் துறை மற்றும் நீா்வளத் துறை அமைச்சருமான என்.ஆனந்த் திருச்சிக்கு வதந்தாா்.
அதே நேரத்தில் திருச்சி விமான நிலையத்தில் வந்திறங்கிய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், தவெக தொண்டா்களின் கூட்ட நெரிசல் காரணமாக விமான நிலையத்திலிருந்து வெளியேற முடியாமல் சுமாா் 15 நிமிஷங்கள் காரிலேயே காத்திருக்க நேரிட்டது. அமைச்சா் சென்ற பிறகு, கூட்டத்தை ஒழுங்குபடுத்திய போலீஸாா், ராம்நாத் கோவிந்த் வாகனத்துக்கு வழி கொடுத்து அனுப்பி வைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






