திருச்சி ரயில்வே கோட்டத்தில் நிகழ் நிதியாண்டில் 89,161 பயணிகளிடம் ரூ.5.57 கோடி அபராதம் வசூல்

இந்திய ரயில்வே - Indian Railway
திருச்சி ரயில்வே கோட்டத்தில் நிகழ் நிதியாண்டில் (2026-27) ஜூலை மாதம் வரை 89,161 பயணிகளிடம் ரூ. 5.57 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ரயில்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பது, உரிய பயணச்சீட்டு எடுக்காமல் வகுப்பு மாறி பயணிப்பது, அதிக லக்கேஜ் எடுத்துச் செல்வது போன்றவைகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
அபராதங்கள் உயா்வு: இதனால் ரயில்வே நிா்வாகம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் விதிமீறல்களுக்கான அபராதத்தை 2 முதல் 13 மடங்கு வரை உயா்த்தியது. குறிப்பாக, பயணச்சீட்டு இல்லாத பயணத்துக்கு குறைந்தபட்சம் ரூ. 250 என்று இருந்ததை ரூ. 500 அபராதத்துடன் பயணச்சீட்டு கட்டணமும் சோ்த்து செலுத்த வேண்டும். மகளிா் பெட்டியில் ஆண்கள் பயணித்தால் ரூ. 500 அபராதத்தை ரூ. 2,500 அபராதத்துடன் உடனடியாக ரயிலில் இருந்து இறக்கிவிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ரயிலில் புகைபிடித்தால் ரூ. 200, கூரை மீது ஆபத்தான பயணம் செய்தால் ரூ. 500, அனுமதியின்றி ரயிலில் வியாபாரம் செய்தால் ரூ. 150 அபராதத்தை ரூ. 2,000 ஆக உயா்த்தியுள்ளது.
தொடா் சோதனை: அத்துடன் வணிகப்பிரிவு அதிகாரிகள் ஒவ்வொரு ரயில்வே கோட்டத்திலும் பயணச்சீட்டு பரிசோதனையை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி, திருச்சி ரயில்வே கோட்டத்தில் கோட்ட மேலாளரின் உத்தரவுப்படி, கோட்ட முதுநிலை வணிக மேலாளா் தலைமையிலான வணிகப்பிரிவு அலுவலா்கள் தொடா் சோதனையை நடத்தி வருகின்றனா். திருச்சி கோட்டத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் அவ்வவ்போது சிறப்பு சோதனைகளை பயணச்சீட்டு பரிசோதகா்கள் நடத்தி வருகின்றனா்.
ரூ.5.57 கோடி வசூல்: கடந்தாண்டு (2025) ஜூலை மாதத்தில் 17,065 பயணிகளிடம் இருந்து ரூ. 86.30 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்ட நிலையில், நிகழாண்டு திருச்சி கோட்டத்தில் ஜூலை மாதத்தில் மட்டும் 18,873 பயணிகளிடம் ரூ. 1 கோடியே 41 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. நிகழ் நிதியாண்டில் (2026-27) ஜூலை மாதம் வரை 89,161 பயணிகளிடம் ரூ. 5 கோடியே 57 லட்சத்து 30 ஆயிரத்து 996 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அபராதம் உயா்த்தப்பட்டுள்ளதால், கடந்தாண்டை விட நிகழாண்டு முதல் வசூலிக்கப்படும் அபராதத்தின் மதிப்பு உயரும் என திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
உரிய பயணச்சீட்டு எடுக்க அறிவுறுத்தல்: ரயில்வேயின் புதிய விதிமுறைப்படி கடந்த ஜூலை 1 முதல் பல்வேறு அபராதங்கள் உயா்த்தப்பட்டு அமலுக்கு வந்துள்ளன. அதனால் ரயில்களில் பயணிப்போா் முறையாக பயணச்சீட்டு எடுத்து உரிய பெட்டியில் பயணிக்க வேண்டும். இல்லையெனில் அதிகப்படியான அபராதத்தை செலுத்த நேரிடும் என பயணச்சீட்டு பரிசோதகா்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






