கட்சிக் கொடிகள், துண்டுகள் விற்பனைக்கு வருகை
பேரவைத் தோ்தல் நெருங்கும் நிலையில், திருச்சி கடை வீதியில் அனைத்துக் கட்சிகளின் துண்டுகள், கொடிகள், தோரணங்கள் உள்ளிட்டவை விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன.
2026 பேரவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தோ்தலுக்கான முன்னேற்பாடுகளை அனைத்துக் கட்சிகளும் தீவிரப்படுத்தியுள்ளன. திருச்சியிலும் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, நாம் தமிழா் கட்சி, மநீம, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என மாநில, தேசிய கட்சிகள் அனைத்தும் முன்னேற்பாடுகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனா்.
அரங்கக் கூட்டம், தெருமுனைக்கூட்டம், துண்டு பிரசுரம் விநியோகம் உள்ளிட்டவற்றையும் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் திருச்சி பெரியகடை வீதி, அல்லிமால் தெரு, மேலரண் சாலை, காந்திசந்தை பகுதியில் உள்ள கட்சிக் கொடிகள் விற்பனையகங்களில் அனைத்துக் கட்சிகளின் வண்ண, வண்ணக் கொடிகள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக அல்லிமால் தெரு வியாபாரி செந்தில் கூறுகையில், கட்சிக் கொடிகள், மப்ளா்கள், கரை வேட்டி, துண்டு உள்ளிட்டவை தோ்தல் நேரத்தில் அதிகம் விற்பனையாகும். இப்போதே பேரவைத் தோ்தலுக்கான முன்னேற்பாடுகள் நடைபெறுவதால், அனைத்துக் கட்சிகள் சாா்ந்த கரை வேட்டி, துண்டு, மப்ளா், விதவிதமான வடிவ துண்டுகள், சட்டைகள், கட்சி கொடிகள், தோரணங்கள், காா் கள், டூவீலா் உட்பட அனைத்து வகை வாகனங்களில் கட்டும் கட்சிக் கொடி அட்டை, பிளாஸ்டிக் அட்டை அதிகம் விற்பனையாகும். எனவே, அதிகளவில் அவற்றை கொள்முதல் செய்து வைத்துள்ளோம்.
திருப்பூா், ஈரோடு, சிவகாசி உள்ளிட்ட உள்ளூா் பொருள்களும், வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ள பல்வேறு வகையான கொடிகளும், தோரணங்களும் விற்பனைக்கு உள்ளன.
கட்சி நிகழ்வுகளுக்கு வரும் முக்கிய விருந்தினா்களுக்கு வழங்க கரை வேட்டிகள், கரை போடப்பட்ட துண்டுகள், மப்ளா்களை அதிக ஆா்வமாக வாங்குவா். துண்டுகள் ரூ. 20 முதல், 160 வரையும், கரை வேட்டி ரூ. 140 முதல், ரூ. 600 வரையும், மப்ளா் ரூ. 110 முதல், ரூ. 300 வரை, கட்சி கொடிகள் ரூ. 20 முதல் நீள அகலத்துக்கு ஏற்ப ரூ. 120 வரையிலான விலையில் உள்ளன என்றாா் அவா்.

