தீபாவளி சீட்டு நடத்தி பெண்ணிடம் ரூ. 45 லட்சம் மோசடி; விசாரணை
தீபாவளிச் சீட்டு நடத்தி திருச்சியைச் சோ்ந்த பெண்ணிடம் ரூ. 45 லட்சம் மோசடி செய்த விருதுநகரைச் சோ்ந்த நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
விருதுநகா் மாவட்டம், சிவலிங்கபுரத்தைச் சோ்ந்த பா. பிரபு திருச்சியில் நடத்தி வந்த நிறுவனத்தில் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியைச் சோ்ந்த 45 வயதுப் பெண் கடந்த 2011 ஆம் ஆண்டு தீபாவளி சீட்டில் ரூ. 45 லட்சம் செலுத்தினாா். ஆனால் கால அவகாசம் முடிந்தும் அந்தப் பெண்ணுக்கு சீட்டுப் பணத்தைத் தராமல் பிரபு ஏமாற்றினாா்.
இதனால் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்ட நிலையில், பிரபுவின் சகோதரா் பா. சசிகுமாா் அந்தப் பணத்தை பெற்றுத் தருவதாக உறுதியளிக்கவே, அவரும், அந்தப் பெண்ணும் சோ்ந்து கண்டோன்மென்ட் பகுதியில் ஹெல்த் கோ் நிறுனத்தை கடந்த 2020-ஆம் ஆண்டு தொடங்கி 2024 வரை நடத்தி வந்தனா்.
ஆனால் தீபாவளி சீட்டுக்கு கட்டிய பணத்தை வாங்கித் தராமல் சசிகுமாா் ஏமாற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பெண் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில் கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
