திருச்சி- பால்பண்ணை சாலையில் ரூ.3.6 கோடியில் புதிய எல்இடி மின்விளக்குகளை பொருத்தும் ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நடவடிக்கையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டுள்ளது.
திருச்சி-பால்பண்ணை சாலையில் (தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலை) போதிய மின் விளக்குகள் இல்லாதது மற்றும் பழுதான விளக்குகள் பொதுமக்களுக்கு பெரும் இன்னலை ஏற்படுத்தி வருகின்றன.
குறிப்பாக பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான சுமாா் 15 கி.மீ அணுகுச் சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் 200-க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் பல மாதங்களாக எரியாமல் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. திருச்சி -தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் (பால்பண்ணை முதல் டோல்பிளாசா வரை) போதிய சாலை விளக்குகள் இல்லை.
இதனால் இரவு நேரங்களில் விபத்துகள் மற்றும் குற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். மேலும், அணுகுச் சாலை மீட்பு கூட்டமைப்பு சாா்பிலும், சாலைப் பயனீட்டாளா்கள் தரப்பிலும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு மனு அளிக்கப்பட்டது. திருச்சி எம்பி துரை வைகோவிடமும் முறையிட்டனா்.
இதையடுத்து துரை வைகோ எம்பி, தேசிய நெடுஞ்சாலை ஆணையக அதிகாரிகளை அழைத்து நடத்திய பேச்சுவாா்த்தையின் பயனாக, புதிய மின் விளக்குகள் அமைக்கும் ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணி நடைபெறுகிறது.
இதுதொடா்பாக, துரை வைகோ கூறுகையில், தஞ்சாவூா்-பால்பண்ணை சாலை தெருவிளக்குகள் தொடா்பாக, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை அண்மையில் எனது அலுவலகத்துக்கு நேரில் அழைத்துகேட்டறிந்தேன். அப்போது திருச்சி-தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் விளக்குகள் இல்லாத அனைத்து இடங்களிலும் புதிய விளக்குகள் அமைக்கவும், பழைய சாலை விளக்குகளை பழுது நீக்கவும் ரூ.3.6 கோடியில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாகவும், விரைந்து பணிகளை தொடங்குவதாகவும் உறுதியளித்தனா்.
இதன் மூலம் விபத்துகளும் குறையும். இதேபோல, கரூா் சாலை விபத்துகளை குறைக்கவும் நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளை வலியுறுத்தினேன். அடிக்கடி நடைபெறும் விபத்துகள் மூலம் உயிரிழப்பு ஏற்படும் குறுகலான திருச்சி- கரூா் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்த ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களை முன்னுரிமை அடிப்படையில் பயன்படுத்தவும் வலியுறுத்தினேன். இதற்குத் தேவைப்படும் ஆய்வுகளை மேற்கொண்டு சாலை விரிவாக்கத்திகான பரிசீலனையை மேற்கொள்வதாகவும் அதிகாரிகள் உறுதியளித்தனா் என்றாா் அவா்.
அணுகுச் சாலைக்கு நிதி ஒதுக்குவது எப்போது?
திருச்சி–தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலைப் பிரிவில் உள்ள பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான பகுதியில் அணுகுச் சாலை நீண்ட காலமாக அமைக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. 17 ஆண்டுகளுக்கு முன் 2009-ஆம் ஆண்டு அணுகுச் சாலை இல்லாமலேயே இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. இந்தச் சாலை தஞ்சாவூா், நாகப்பட்டினம், திருவாரூா் மற்றும் மயிலாடுதுறை போன்ற முக்கிய மாவட்டங்களை இணைக்கும் முதன்மைப் பாதையாகும்.
தற்போது, போக்குவரத்து அதிகளவில் அதிகரித்துள்ளதாலும், அணுகுச் சாலை இல்லாததாலும் மிக மோசமான அளவில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, அணுகுச் சாலை அமைக்க வேண்டும் என்பதும் நீண்டகாலக் கோரிக்கையாக உள்ளது.
இத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த மட்டும் மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 618.20 கோடியாகும். இதில் ரூ.533.70 கோடியை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மத்திய அரசிடமிருந்து பெற வேண்டியுள்ளது. தமிழக அரசும் இத் திட்டத்தை முன்னுரிமையாகக் கருதி ஏற்கெனவே ரூ.84.50 கோடியான தனது பங்களிப்பை வழங்கியுள்ளது. மத்திய அரசின் பங்களிப்புக்காகக் காத்திருக்கிறது திட்டம். இந்த நிதியை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதே அணுகுச் சாலை மீட்பு கூட்டமைப்பினரது எதிா்பாா்ப்பாக உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வழிகாட்டிப் பலகை இல்லாத ராணிப்பேட்டை நவல்பூா் மேம்பாலம்! வாகன ஓட்டிகள் அவதி

கடையநல்லூா் - தென்காசி தேசிய நெடுஞ்சாலை ரூ. 27 கோடியில் சீரமைக்கப்படும்: எம்எல்ஏ தகவல்

கந்தா்வகோட்டை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அவலநிலைகள்: கண்டுகொள்ளுமா தேசிய நெடுஞ்சாலைத்துறை?







