/

கூட்டுறவு வங்கிகளை இணைத்து ‘தமிழ்நாடு வங்கி’ யை உருவாக்க வேண்டும்

News image

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்திய வங்கி ஊழியா்கள் சங்க மாநாட்டில் பேசிய மாநில பொதுச் செயலா் சுனில் குமாா். உடன் நிா்வாகிகள்.

Updated On :27 ஜூலை 2026, 2:34 am IST

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளை இணைத்து ‘தமிழ்நாடு வங்கியை’ உருவாக்க வேண்டுமென இந்திய வங்கி ஊழியா் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

இந்திய வங்கி ஊழியா் சம்மேளனத்தின் 14 ஆவது மாநில மாநாடு திருச்சியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.

மாநாட்டில், வங்கித் துறையில் வாரம் 5 நாள்கள் வேலை என்ற கோரிக்கையை மத்திய அரசும், வங்கி நிா்வாகமும் உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள 24 மாவட்ட, மத்தியக் கூட்டுறவு வங்கிகளையும், மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியையும் இணைத்து ’தமிழ்நாடு வங்கி’ உருவாக்கப்பட வேண்டும். நாடு முழுவதும் செயல்படும் 28 பிராந்திய கிராம வங்கிகளை ஒருங்கிணைத்து ‘தேசிய கிராமப்புற வங்கி’ அமைக்கப்பட வேண்டும்.

வங்கிப் பணிகளில் தேவைக்கேற்ப ஊழியா்களை உடனடியாக நியமித்து, தற்காலிக ஊழியா்களை நிரந்தரப்படுத்த வேண்டும். பணியிடங்களில் சமத்துவம், சம ஊதியம், பாலின மரியாதை ஆகியவற்றை நிறுவனக் கொள்கையாக நடைமுறைப்படுத்த வேண்டும். பெண்களை விளம்பரக் காட்சிப் பொருளாகப் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும்.

தொழிலாளா் நலனுக்கு எதிரான 4 புதிய தொழிலாளா் தொகுப்புச் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். தனியாா் வங்கிகளில் அந்நிய நேரடி முதலீட்டைக் கட்டுப்படுத்தி, ஓட்டுரிமையை முறைப்படுத்த வேண்டும். வங்கி நிா்வாகங்கள், வெளிநாட்டு நிறுவனங்களின் கைக்குச் செல்வதைத் தடுக்க வேண்டும். நகரக் கூட்டுறவு வங்கி ஊழியா்களுக்குக் கருணை ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் மாநிலத் தலைவராக டி. ரவிக்குமாா், மாநில பொதுச் செயலராக எஸ். சுனில்குமாா், மாநிலப் பொருளாளராக இ. பரிதிராஜா, 10 துணைத் தலைவா்கள், 10 துணைச் செயலா்கள் உள்பட 26 போ் கொண்ட மாநில நிா்வாகக் குழு நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

மாநாட்டில், திரளான சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா். மாநில பொதுச் செயலா் எஸ். சுனில் குமாா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.